சீனாவின் ஆதிக்கத்தை வளரவிடாமல் இலங்கையை இந்தியா பாதுகாக்க வேண்டும் -இலங்கை எம்பி வலியுறுத்தல்


சீனாவின் ஆதிக்கத்தை வளரவிடாமல் இலங்கையை இந்தியா பாதுகாக்க வேண்டும் -இலங்கை எம்பி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Nov 2019 6:14 AM GMT (Updated: 2019-11-27T11:44:44+05:30)

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை வளரவிடாமல் இந்தியா பாதுகாக்க வேண்டும் என இலங்கையின் மட்டகளப்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்,

இலங்கையின் மட்டகளப்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி யோகேஸ்வரன் நேற்று நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“இலங்கையில் தற்போது பவுத்த சிங்கள அரசியல் தலையெடுத்து இருக்கிறது. நான் எல்லா மக்களையும் சரிசமமாக நடத்துவேன் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். ஆனால் உண்மையில் பவுத்தத்துக்கும், சிங்கள மக்களுக்கும்தான் முதலிடமும் கிடைக்கும்.

அதிபரும், பிரதமரும் சீனாவின் செல்லப் பிள்ளைகள். எனவே, சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் வளரவிடாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என போகபோகத் தான் தெரியும்.

கோத்தபய ராஜ்பக்சே வந்ததும் ராணுவத்துக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.

Next Story