5 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை: அவமதிப்பு வழக்கில் உள்துறை செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. நேரில் ஆஜராகவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு


5 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை: அவமதிப்பு வழக்கில் உள்துறை செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. நேரில் ஆஜராகவேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Nov 2019 10:45 PM GMT (Updated: 27 Nov 2019 9:18 PM GMT)

5 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாத உள்துறை செயலாளர், கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ஆசியா. இவரது கணவர் சீராஜூதீன், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆயுள் தண்டனை கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்படி தன்னுடைய கணவரை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், ஆசியா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இவரை போல மேலும் 4 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி அவர்களது உறவினர்கள் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை எல்லாம் விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 5 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை.

இதையடுத்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை 5 மனுதாரர்களும் தனித்தனியாக தாக்கல் செய்தனர்.

இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

5 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஒன்று இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யவேண்டும். அல்லது ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். ஆனால், அதிகாரிகள் இரண்டையும் செய்யவில்லை.

இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை விசாரித்த நாங்கள் (நீதிபதிகள்) கடந்த ஜூலை 4-ந்தேதி முதல் கடந்த 21-ந்தேதி வரை 6 உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். உத்தரவுகளை அமல்படுத்த கால அவகாசமும் வழங்கினோம். ஆனால், இதுவரை ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தவில்லை.

அதனால், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. எனவே, உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. உள்ளிட்டோர் 4 வாரத்துக்குள் நேரில் ஆஜராகி பதில் அளிக்கவேண்டும்.

ஒருவேளை இந்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்திவிட்டாலோ, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து விட்டாலோ அவர்கள் நேரில் ஆஜராக தேவையில்லை.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Next Story