கார்ட்டோசாட்-3 உள்பட 14 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது; பிரதமர் மோடி வாழ்த்து


கார்ட்டோசாட்-3 உள்பட 14 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது; பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 27 Nov 2019 11:30 PM GMT (Updated: 28 Nov 2019 12:25 AM GMT)

‘கார்ட்டோசாட்-3’ உள்பட 14 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த வெற்றிக்காக இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை, 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, பூமி ஆராய்ச்சிக்காக ‘கார்ட்டோசாட்’ என்று அழைக்கப்படுகிற, முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. ஏற்கனவே 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில், 9-வது செயற்கைகோளாக ‘கார்ட்டோசாட்-3’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கியது. இது மேம்படுத்தப்பட்ட, அதிநவீன, மூன்றாம் தலைமுறை செயற்கை கோள் ஆகும்.

1,625 கிலோ எடை கொண்ட இந்த ‘கார்ட்டோசாட்-3’ செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் கடந்த 25-ந் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வந்தன.

ஆனால் பின்னர் அந்த திட்டம் மாற்றப்பட்டு, 27-ந் தேதி காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டில் ‘கார்ட்டோசாட்-3’ செயற்கை கோளுடன், அமெரிக்க நாட்டின் வணிக ரீதியிலான 13 ‘நானோ’ செயற்கை கோள்களையும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக 26 மணி நேர ‘கவுண்ட் டவுன்’ என்னும் இறங்குவரிசை ஏற்பாடுகள் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) காலை 7.28 மணிக்கு தொடங்கி நடந்து வந்தது.

அந்த கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு, நேற்று காலை சரியாக 9.28 மணிக்கு ‘கார்ட்டோசாட்-3’ மற்றும் 13 நானோ செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டின் முதல் நிலை மற்றும் 2-ம் நிலையில் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர் ஆகும். பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் புறப்பட்ட 17 நிமிடம் 46 வினாடிகளில் பூமியில் இருந்து 509 கிலோ மீட்டர் உயரத்தில் சூரிய சுற்றுவட்ட பாதையில் திட்டமிட்ட இலக்கில் ‘கார்ட்டோசாட்-3’ செயற்கைகோளை நிலை நிறுத்தியது.

அதைத் தொடர்ந்து அமெரிக்க நாட்டின் 13 நானோ செயற்கை கோள்களும் ஒன்றன் பின் ஒன்றாக சூரிய சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், ‘எக்ஸ் எல்’ வகையில் 21-வது ராக்கெட் மற்றும் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 49-வது ராக்கெட் என்ற பெருமையை பெறுகிறது. அதேபோல் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டுள்ள 74-வது ராக்கெட் என்பதுடன் இந்த ஆண்டு ஏவப்பட்டிருக்கிற 5-வது ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது.

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் கே.சிவன், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். இவர்களுடன், புதிதாக திறக்கப்பட்ட பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து இருந்து சுமார் 5 ஆயிரம் பார்வையாளர்களும் வந்திருந்தனர். ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தபோது அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசுகையில், “கார்ட்டோசாட்-3 செயற்கை கோள் மற்றும் 13 வாடிக்கையாளர் செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், விண்ணில் திட்டமிட்டபடி 509 கி.மீ. உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.

தொடர்ந்து பேசும்போது, “இதுவரை இஸ்ரோ வடிவமைத்த செயற்கை கோள்களில் எல்லாம் இந்த கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் மிக துல்லியமான, நுட்பமான, சவால் நிறைந்த தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கை கோள் ஆகும்” என்று கூறினார்.

இந்த அற்புதமான வெற்றிக்காக இஸ்ரோவின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும், வரும் மார்ச் மாதத்துக்குள் 13 விண்வெளி திட்டங்களை இஸ்ரோ நிறைவேற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 6 ராக்கெட்டுகள் மூலமாக 7 செயற்கை கோள்களை அனுப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ‘கார்ட்டோசாட்-3’ செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். பொதுவாக செயற்கைகோள்கள் மூலம் பூமியில் உள்ள காட்சிகளை பார்க்க மற்றும் படம் எடுக்க முடியும். ஆனால் ‘கார்ட்டோசாட்-3’ செயற்கைகோள் சாலையில் செல்லும் வாகனங்கள் மட்டும் அல்லாது சாலையில் நடந்து செல்பவர்களை கூட துல்லியமாக பார்க்கவும், படம் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

‘கார்ட்டோசாட்-3’ செயற்கைகோளானது பெரிய அளவிலான நகர்ப்புற திட்டமிடலுக்கான பணிகளுக்கு உதவும். கிராமப்புற வள மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கும் இது உதவும். மேலும், கடலோர நில பயன்பாடு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைகோள் மூலம் நிலப்பரப்பில் எவ்வளவு தூரம் கடல் வெளியே வந்து உள்ளது அல்லது கடல் எந்தப்பகுதிகளில் உள்வாங்கி உள்ளது என்பதை துல்லியமாக பார்க்க, படம் பிடிக்க முடியும்.

எதிரிகளின் ராணுவ நிலைகள், ஆயுதக்கிடங்குகளையும் கூட கார்ட்டோசாட்-3 செயற்கை கோள் படம் பிடித்து அனுப்பும். இந்த செயற்கை கோளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள் மூலம் எடுக்கப்படும் படங்கள் மிகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் (0.25 மீட்டர் அதாவது 25 சென்டி மீட்டர் வரை) இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.எல்.வி. சி-47 ராக் கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்ததற்கு இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்ட்டோசாட்-3 மற்றும் அமெரிக்காவின் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நானோ செயற்கைகோள்களை சுமந்து கொண்டு விண்ணில வெற்றிகரமாக பாய்ந்திருக்கிறது. இதற்காக இஸ்ரோவின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என கூறி உள்ளார்.


Next Story