பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்க ரூ.2,363 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு உத்தரவு


பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்க ரூ.2,363 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 27 Nov 2019 11:00 PM GMT (Updated: 27 Nov 2019 10:19 PM GMT)

அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்காக ரூ.2,363 கோடி தொகையை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, 

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்க விழாவில் 26-ந்தேதியன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். எனவேதான், சென்ற ஆண்டு, வறட்சியின் பாதிப்பு ஏழை மக்களை பாதிக்காதபடி, பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக தமிழக அரசு, அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கமும், பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகள் தங்களிடம் உள்ள பணத்தை இடுபொருள்களுக்கும், பிற பணிகளுக்கும் செலவழித்துவிட்ட நிலையில், அவர்கள் போதிய வருவாய் இன்றி சிரமப்படும் ஏழைக்குடும்பங்கள் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, சென்ற ஆண்டைப்போலவே 2020-ம் ஆண்டிலும் அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும், குடும்பத்திற்குத் தலா ஆயிரம் ரூபாயுடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை அத்துடன் 2 அடி கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்’ என்று கூறினார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசுக்கு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கடிதம் எழுதினார். அதில், தமிழகத்தில் 2 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரத்து 337 சர்க்கரை மற்றும் அரிசி ரேஷன் அட்டைகள் உள்ளன என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுதொடர்பாக அரசுக்கு தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் மேலாண்மை இயக்குனர் எழுதிய கடிதத்தில், இந்த திட்டத்துக்காக ரூ.2,245.85 கோடி செலவாகிறது. ஆனால் 10.19 லட்சம் சர்க்கரை ரேஷன் அட்டை தாரர்கள் தங்களின் அட்டைகளை அரிசி அட்டையாக மாற்றுவதற்கு அரசு அவகாசம் வழங்கியிருப்பதால், அவர்களையும் இந்தத் திட்டத்தின் பயனாளியாக சேர்க்க வேண்டியது வரும். அதன்படி பார்த்தால் இந்தத் திட்டத்துக்கான செலவுத்தொகை ரூ.2,363.13 கோடியாக அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் கேட்டுக்கொண்டபடி ரூ.2,363.13 கோடி தொகையை அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் இணைப்பு முகமையாக அரசுடன் செயல்படும். இதற்கான முன்தொகைகளை சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு கழகம் வழங்க வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் தொகை கிடைப்பதற்கான முழு பொறுப்பை சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஏற்கவேண்டும். சென்னையில் உள்ளவர்களுக்கு இந்தத் தொகை வழங்கும் பொறுப்பை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ஏற்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(வெள்ளிக் கிழமை) காலை 9.45 மணிக்குசென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்தொடங்கி வைக்கிறார்.

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தாலும், பொது மக்களுக்கு வழங்கப்படுவது உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பதை பொறுத்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story