பள்ளி மாணவர்களிடம் சகஜமாக புழக்கம்: தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை - போலீஸ் டி.ஜி.பி. வேதனை


பள்ளி மாணவர்களிடம் சகஜமாக புழக்கம்: தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை - போலீஸ் டி.ஜி.பி. வேதனை
x
தினத்தந்தி 27 Nov 2019 10:50 PM GMT (Updated: 2019-11-28T04:20:20+05:30)

தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி கூறியுள்ளார்.

சென்னை, 

போதைப்பொருள் கலாசாரம் இன்றைய இளம் தலைமுறையினரை ஆட்டுவித்து வருகிறது. எனவே இளைஞர்களை குறி வைத்து கஞ்சா உள்பட போதைப்பொருட்கள் சப்ளை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் வியாசர்பாடி, சர்மா நகர், புளியந்தோப்பு, கொருக்குப்பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது.

‘ஆன்லைன்’ மூலமாகவும் கஞ்சா சப்ளை படுஜோராக நடந்து வருகிறது. சமீபத்தில் ‘ஆன்லைன்’ மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பல் போலீசார் பிடியில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

பள்ளி-கல்லூரி அருகிலேயே கஞ்சா பொட்டலங்கள் கிடைப்பதாகவும், இதனால் மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளில் போலீசார் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். கஞ்சா வியாபாரிகளை பொறி வைத்து போலீசார் பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சார்பில் தென் மண்டல போலீஸ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கேண்டீன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது.

அதாவது நாடு முழுவதும் கடந்த 2014-ம் ஆண்டு 6.7 லட்சமாக இருந்த கஞ்சா பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டு (நடப்பாண்டு) 3 கோடியாக அதிகரித்துள்ளது. இது 3 ஆயிரத்து 300 சதவீதம் அதிகம் ஆகும். இதே காலக்கட்டத்தில் ‘ஹெராயின்’ போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2.9 லட்சத்தில் இருந்து 19 லட்சமாக உயர்ந்துள்ளது.

மேலும் இதேபோல ‘கோக்கைன்’ போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தில் இருந்து 2.3 கோடியாக அதிகரித்துள்ளது.

தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி இந்த கூட்டத்தில் பேசும்போது, “தமிழகத்தில் கஞ்சா பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இந்த வலையில் இளைஞர்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஷகீல் அக்தர் பேசும்போது, ‘இணையதளங்கள் மூலமாக கள்ளச்சந்தையில் ‘ஆர்டர்’ செய்து நூதன முறையில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எங்கள் கவனத்துக்கு தகவல்கள் வருகின்றன. எனவே குறிப்பிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் போதைப்பொருள் கடத்துவதை தடுப்பதற்காக விமானங்கள் மூலமாக கொண்டுவரப்படும் பார்சல்கள், கூரியர் சேவைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்’ என்றார்.

கூட்டத்தில், குறிப்பாக வருவாய் இழந்து, தோல்வியடைந்த மருந்து கம்பெனிகள் செயற்கையான போதை மருந்துகளை சந்தைக்கு சப்ளை செய்வதாகவும், அதனை கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருள்களை மாணவர்களுக்கு சப்ளை செய்யும் கடத்தல்காரர்கள் குறைவான அளவு போதைப்பொருட்களோடு பிடிபட்டால் கூட, அவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்ட திருத்தங்களை செய்ய அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும் என்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

Next Story