வேலூரில் இருந்து பிரிந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


வேலூரில் இருந்து பிரிந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Nov 2019 11:30 PM GMT (Updated: 2019-11-29T03:39:46+05:30)

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயமானது. இந்த மாவட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ராணிப்பேட்டை மாவட்டமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களின் தொடக்க விழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா திருப்பத்தூரில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தின் தொடக்க விழா ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய்த்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் பகல் 1 மணிக்கும் நடந்தது.

விழாக்களுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்று பேசினார். கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார்.

விழாக்களில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 35-வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தையும் 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஏற்கனவே முடிவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட தொடக்கவிழாவில் ரூ.94 கோடியே 37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், ராணிப்பேட்டை மாவட்ட தொடக்கவிழாவில் ரூ.89 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.184 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

அதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய தாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தான் போகும் இடமெல்லாம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என்று கூறிவருகிறார். நிச்சயம் உறுதியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தொடங்கி விட்டது. ஆனால் திட்டமிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சியினர் தவறான பொய்யான செய்தியை கூறி மக்களை குழப்பி வருகிறார்கள். நிச்சயமாக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அமைப்பு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அரசு சொல்லி அறிவிக்கும் அமைப்பு கிடையாது. தமிழகத்தில் இருக்கும் நிலவரத்தை அறிந்து நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி செயல்படுகின்றனர். ஆனால் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு நீதிமன்றத்தை நாட பார்க்கிறார். கொல்லைப்புறம் வழியாக உள்ளாட்சி தேர்தலை நிறுத்த பார்க்கிறார்கள்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது உள்ளாட்சி தேர்தல் நடத்த அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. ஆனால் இடஒதுக்கீடு சரியில்லை என்று சொல்லி நீதிமன்றத்துக்கு சென்று தேர்தலை நிறுத்தியது தி.மு.க.வாகும்.

அதே நேரத்தில் வெளியில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. பயப்படுகிறது என்று கூறுகின்றனர். உள்ளாட்சி தேர்தலை கண்டு அ.தி.மு.க. அஞ்சியது கிடையாது. எந்த காலத்திலும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க எதிர்கட்சி தலைவர் அஞ்சுகிறார். 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. நிறுத்தியது. தற்போதும் மற்றவர்களை தூண்டி விட்டு நீதிமன்றத்துக்கு சென்று ஏதாவது குட்டையை குழப்பி இந்த தேர்தலை நிறுத்த முயற்சி செய்கின்றனர்.

புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.

2018-ம் ஆண்டு மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையிலேயே மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1790-ம் ஆண்டில் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு 3-4-1792 வரை செயல்பாட்டில் இருந்தது. பின்னர் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டு அதன் தலைநகராக திருப்பத்தூர் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகம் இன்று ரெயில்நிலையமாக இருக்கிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் நடைபெறும் அரசால் திருப்பத்தூர் புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மத்திய அரசுக்கு அ.தி.மு.க. அரசு கூஜா தூக்குகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். மக்களின் நலனுக்காக தான் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அதன் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனை, 9 மருத்துவக்கல்லூரி மற்றும் பல்வேறு திட்டங்களை பெற்றுள்ளோம். ஆனால் தி.மு.க. மத்திய அரசில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தபோது எத்தனை மருத்துவ கல்லூரிகளை பெற்றீர்கள்?, மக்களுக்காக என்ன திட்டங்கள் கொண்டு வந்தீர்கள்? என்பதை கூற முடியுமா. உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அதிகாரத்தை பெற்றீர்கள்.

எங்களை பொறுத்தவரை மத்திய அரசுடன் இணைந்து அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story