சென்னை கோயம்பேட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்


சென்னை கோயம்பேட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Nov 2019 2:04 PM GMT (Updated: 2019-11-29T19:34:03+05:30)

சென்னை கோயம்பேட்டில் ரூ.486 கோடி செலவில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னை மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பெரும் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், ஆறுகள் மூலம் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில், முதல் மற்றும் இரண்டாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கொடுங்கையூரைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில்,  ரூ.486 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 

இதையடுத்து விழாவில்  முதலமைச்சர் பழனிசாமி பேசியபோது, அதிக அளவில் கழிவுநீரை சுத்திகரிக்கும் மாநிலமாக தமிழகம் திகழும் என்றார். சென்னையில் மக்களுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் வெளியேற்றும் வசதி உடனடியாக கிடைக்கும் வகையில் ''அழைத்தால் இணைப்பு'' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.  3ம் நிலை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து ஆலைகளுக்கு நீர் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

இங்கு சுத்திகரிக்கபடும் கழிவு நீரானது, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மறுபயன்பாடு செய்யப்பட இருக்கிறது.

நீர் மறுபயன்பாடு கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். அதை துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வேலுமணி,ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

Next Story