சென்னையில் 100 மின்சார ஆட்டோக்கள்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


சென்னையில் 100 மின்சார ஆட்டோக்கள்; எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Nov 2019 12:00 AM GMT (Updated: 2019-11-30T04:04:59+05:30)

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னையில் 100 மின்சார ஆட்டோக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தால் பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றியமைக்கப்பட்டு, முதற்கட்டமாக சென்னையில் எம்-எலக்ட்ரிக் ஆட்டோக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியின்போது கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளைப் ஈர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்தவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய்க்கு முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குழுவினர் கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி முதல் செப்டம்பர் 10-ந் தேதி வரை அரசு முறை பயணம் மேற்கொண்டனர்.

அப்போது 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 35 ஆயிரத்து 520-க்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்.

இப்பயணத்தின் நிறைவாக, துபாயில், இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பு ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாயின் கே.எம்.சி. குழுமம் மற்றும் எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் விதமாக எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தால் பெட்ரோல் ஆட்டோக்கள், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றியமைக்கப்பட்டன.

முதற்கட்டமாக சென்னையில் 100 எம்-மின்சார ஆட்டோக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 4 எம்-மின்சார ஆட்டோக்களை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்த எம்-மின்சார ஆட்டோக்களை ஒருமுறை முழுமையாக மின்னேற்றம் (சார்ஜ்) செய்வதன் மூலம் சுமார் 100 கி.மீ. தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆட்டோக்களில் சி.சி.டி.வி. கேமரா, ஜி.பி.எஸ். வசதி, ஆபத்து பொத்தான் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களை எம் ஆட்டோ பிரைட் என்ற செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். பெரும்பான்மையான எம்-மின்சார ஆட்டோக்களை பெண்கள் மற்றும் திருநங்கையர் ஓட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி - ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் கா.ப.கார்த்திகேயன், எம் ஆட்டோ குழுமத்தின் தலைவர் மன்சூர்அலிகான், நிர்வாக இயக்குனர் யாஸ்மின் ஜவஹர் அலி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எம் மின்சார ஆட்டோக்களை புதிதாக வாங்க வேண்டும் என்றால் ஒன்றின் விலை சுமார் ரூ.2.50 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோலில் இயங்கும் ஆட்டோ இருக்கும் பட்சத்தில் அதை மின்சார ஆட்டோவாக மாற்ற வேண்டும் என்றால் ரூ.1.20 லட்சம் செலவாகிறது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக வனப்பழகுனர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 137 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும், அவர்களுக்கு 20 மாத பயிற்சிக்காலத்திற்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த தொகுப்பு ஊதியத்திற்கு பதிலாக முறையான ஊதியம் வழங்கவும் மற்றும் பிற செலவினங்களுக்காகவும் 17.72 கோடி ரூபாய் அனுமதித்தும் முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்ட தொழில் மையங்கள், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனரகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற, காலியாகவுள்ள 32 உதவிப் பொறியாளர் (தொழில்கள்) மற்றும் 2 முதுநிலை வேதியியலாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, அவர்களில் 7 பேருக்கு நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story