உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு ‘தில்’ இருக்கிறது; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு


உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு ‘தில்’ இருக்கிறது; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 29 Nov 2019 11:45 PM GMT (Updated: 29 Nov 2019 10:43 PM GMT)

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு தில் இருக்கிறது என்றும், தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு வேண்பாக்கம் கிராமத்தில் நடந்த விழாவில் தமிழகத்தின் 37-வது மாவட்டமான செங்கல்பட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் அதே வேளையில், அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தொழிலாக கொண்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் எப்படிப்பட்டவை என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். உண்மையிலேயே, மக்கள் பணி ஆற்றுபவர்களுக்கு உரிய பலன் தானாகவே வந்துசேரும்.

இன்றையதினம்(நேற்று) ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘முதல்-அமைச்சர் திடீரென்று, நேரடித்தேர்தலை ரத்துசெய்து விட்டு வார்டு வாரியாக தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். இதையெல்லாம் அ.தி.மு.க. அரசு, திட்டமிட்டு செயல்படுத்தி, தேர்தலை நிறுத்துவதாக தெரிகிறது’ என்ற ஒரு பச்சைப்பொய்யை தெரிவித்திருக்கின்றார்.

1996-ம் ஆண்டு வரை உள்ளாட்சித் தேர்தல், வார்டு வாரியாக நடைபெற்று, அதன் மூலமாகத்தான் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். 1996-ம் ஆண்டு வரை மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்தான் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு தி.மு.க. ஆட்சியின்போது நேரடித்தேர்தலை அறிமுகம் செய்தார்கள். அதற்குப் பிறகு 2006-ம் ஆண்டு நேரடியாக நடைபெற்ற தேர்தலை மறைமுகத் தேர்தலாக அறிவித்ததும் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர், தற்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்தான்.

அவரே மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளைப் பற்றி விரிவாக, தெளிவாக சட்டமன்றத்தில் கூறி தீர்மானத்தை நிறைவேற்றித் தரக்கோரியிருந்தார். ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, வார்டு வாரியாக தேர்தல் நடத்துவது சிறப்பாக இருக்கும் என்று அவரே சட்டமன்றத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

எங்களைப் பொறுத்தவரை, வார்டு வாரியாக தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றோம். இதிலே என்ன தவறு இருக்கின்றது. நீங்கள் தெரிவித்தால் சரி, நாங்கள் அறிவித்தால் அது தவறா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் தானே பேரூராட்சித் தலைவர்களையும், நகர மன்றத்தலைவர்களையும், மேயர்களையும் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதில் என்ன தவறு இருக்கின்றது? இதில் எந்தத் தவறும் கிடையாது.

வேண்டுமென்றே, திட்டமிட்டு இந்தத் தேர்தலை தடை செய்வதற்காக, நிறுத்துவதற்காக ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகின்றார். உண்மையிலே, இந்த தேர்தலைக் கண்டு அவர் அஞ்சுகிறார் என்று தான் நான் நினைக்கின்றேன். ஆனால் அ.தி.மு.க. அரசு தேர்தல் நடத்த அஞ்சுகிறது என்று வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த தில் இருக்கிறதா? திராணி இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா? என்று கேட்கிறார். அ.தி.மு.க.வுக்கு தில், தெம்பு, திராணி, துணிவு இருக்கிறது என்று நாங்கள் தெரிவிக்கிறோம். மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தால் அதை எதிர்கொள்ளக்கூடிய வலிமை அ.தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறோம். நீங்கள் நொண்டிச்சாக்கு சொல்லிக் கொண்டு நீதிமன்றத்தை நாட பார்க்கின்றீர்கள். இந்த தேர்தலை நிறுத்துவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எதுவும் பலிக்காது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

2019-ம் ஆண்டு புதுடெல்லியில் நடத்தப்பட்ட, நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க. சார்பாக டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு, ‘மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்துங்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) மாநில தேர்தல் ஆணையத்தால் கூட்டப் பட்ட கூட்டத்தில், மின்னணு வாக்கு எந்திரத்தை பயன் படுத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட என்.ஆர்.இளங்கோ பேசி இருக்கிறார். என்ன வேடிக்கை பாருங்கள், தமிழ்நாட்டில் கொள்கையில்லாத ஒரே கட்சி தி.மு.க. தான்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதை போல பச்சோந்தி அடிக்கடி நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். ஆனால், அதைவிட வேகமாக கொள்கையை மாற்றக்கூடிய ஒரே கட்சி தி.மு.க. என்பதை நான் சொன்ன கருத்தில் இருந்து உங்களுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்திருக்கும் என்று நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story