உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Dec 2019 10:01 AM GMT (Updated: 1 Dec 2019 10:01 AM GMT)

உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு தொகுப்பை முன் கூட்டியே அ.தி.மு.க. அரசு வழங்கி வருகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில்  தி.மு.க. எம்.எல்.ஏ., பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா நடைபெற்றது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தலில் பொய்களை கூறி தி.மு.க. வெற்றி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அப்படியென்றால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பொய் கூறி வெற்றி பெற்றதாக அவரால் கூறமுடியுமா? 

உள்ளாட்சி தேர்தலை யாராவது நிறுத்தி விட மாட்டார்களா? என்று அ.தி.மு.க. நினைத்து வருகிறது.  முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது.

1989-ல் நானும் ஸ்டாலினும் எம்.எல்.ஏ. ஆனோம். ஆனால் நான் முதல்வராகிவிட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். நான் மண்புழு போன்று ஊர்ந்து சென்று முதல்வராகமாட்டேன். நான் கருணாநிதியின் மகன். தன்மானத்தை இழக்க மாட்டேன். அந்த பதவி எனக்கு தேவையில்லை.

உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து பொங்கல் பரிசு தொகுப்பை முன் கூட்டியே வழங்கி வருகிறது அ.தி.மு.க. அரசு. மிசாவில் நான் இத்தனை நாள் சிறையில் இருந்தேன் என்று நானே சொல்வதற்கு எனக்கு வெட்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story