தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: 23 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: 23 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2019 12:01 AM GMT (Updated: 2 Dec 2019 12:01 AM GMT)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்து இருக்கிறது. 23 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 28-ந்தேதியில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்து இருப்பதாகவும், அடுத்து வரும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) நல்ல மழை பெய்து இருக்கிறது. மேலும் 2 நாட்களுக்கு(இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல், சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், ஈரோடு, கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மொத்தமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கு பிறகு, தமிழகத்தில் மழை அளவு சற்று குறைந்து காணப்படும். அதன்பின்னர், 5 நாட்களுக்கு மழை இருக்காது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

பெரும்பாலும் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் தான் மழை இருக்கும். இதுவரை வங்கக்கடலில் எந்த புயலும் உருவாகவில்லை. லட்சத்தீவு பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கிறது.

இதனால் அந்த பகுதிகளில் சூறாவளி காற்று இருக்கும். எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் நாளை (இன்று) செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

சாத்தான்குளம் 19 செ.மீ., கடலூர், தூத்துக்குடி, குறிஞ்சிப்பாடி தலா 17 செ.மீ., மணிமுத்தாறு 15 செ.மீ., வேதாரண்யம் 14 செ.மீ., செய்யூர், உளுந்தூர்பேட்டை, மதுராந்தகம், சிதம்பரம், தரங்கம்பாடி, குப்பநத்தம், புவனகிரி தலா 13 செ.மீ., தாம்பரம், பரங்கிப்பேட்டை, சத்யபாமா பல்கலைக்கழகம், மரக்காணம், பாம்பன், அண்ணாமலை நகர் தலா 12 செ.மீ., புதுக்கோட்டை, ராமேஸ்வரம், விருத்தாசலம், மாமல்லபுரம், அண்ணா பல்கலைக்கழகம், மன்னார்குடி தலா 11 செ.மீ., பண்ருட்டி, போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், திருத்துறைப்பூண்டி, திருச்செந்தூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி தலா 10 செ.மீ., அம்பாசமுத்திரம், ஜெயம்கொண்டம், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், வானூர், செம்பரம்பாக்கம், நாகப்பட்டினம், திருவள்ளூர், தொண்டி, பள்ளிப்பட்டு, மதுக்கூர், பட்டுக்கோட்டை தலா 9 செ.மீ., அதிராம்பட்டினம், திருவலங்காடு, செங்கல்பட்டு, பாண்டவையாறு, கேளம்பாக்கம், பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், பூண்டி, காவேரிப்பாக்கம், மணமேல்குடி, உத்திரமேரூர், தாமரைப்பாக்கம், சோழவரம் தலா 8 செ.மீ. உள்பட பரவலாக பல இடங்களில் மழை பெய்தது.

Next Story