17 பேர் பலி; ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிப்பு: முதல் அமைச்சர் நாளை கோவை பயணம்


17 பேர் பலி; ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிப்பு: முதல் அமைச்சர் நாளை கோவை பயணம்
x
தினத்தந்தி 2 Dec 2019 8:14 AM GMT (Updated: 2 Dec 2019 8:14 AM GMT)

கோவையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கோவையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பருவமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் மழை காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

இந்த சம்பவத்தில் 7 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் வரை பலியாகி உள்ளனர்.  மழை பெய்து வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.  அவர்களின் உடல்கள் மண் மூடி  கிடந்துள்ளன.

இதன்பின் காலையில் அந்த வழியே சென்றவர்கள் இதுபற்றி அறிந்து தகவல் அளித்த பின்னரே போலீசார் அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இந்த மீட்பு பணிகளில், காவல் துறையினருடன் தீயணைப்பு துறையினரும் இணைந்து ஈடுபட்டனர்.  இதில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.  

இதைத்தொடர்ந்து,  தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி, சம்பவ பகுதிகளை நேரில் பார்வையிட்டு, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற கோவைக்கு நாளை செல்கிறார்.

Next Story