உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் ஆதரவும்-எதிர்ப்பும்


உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் ஆதரவும்-எதிர்ப்பும்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:00 PM GMT (Updated: 2 Dec 2019 9:17 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு அரசியல் கட்சி இடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஏதோ ஒரு வகையில் ஒளிவு மறைவோடு செயல்பட்டு வருகிறது என்கிற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையம் என்பது பஞ்சாயத்து ராஜ் நகர்பாலிகா சட்டத்தின்படி ஒரு சுயேட்சையான அமைப்பாகும்.

ஆனால், அ.தி.மு.க. அரசு இந்த அமைப்பை தமது விருப்பத்திற்கேற்ப செயல்படுகிற கைப்பாவை அமைப்பாக மாற்றி வைத்திருக்கிறது. இதன்மூலம் பாரபட்சமற்ற, நியாயமான தேர்தல் நடைபெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். எது எப்படி இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்வதற்கும், மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிக்கு பாடம் புகட்டுவதற்கும் காங்கிரஸ் கட்சி தயாராகவே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சித் தேர்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து நடத்தப்பட வேண்டிய தேர்தலாகும். ஆனால் ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சகத் திட்டமாகும்.

தேர்தலையே தள்ளிப் போடுவதற்காக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, தி.மு.க. மீது அபாண்டமாக பழி சுமத்துவது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியாகும் என்பதால், இந்த அறிவிப்பைக் கண்டிப்பதோடு, புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிவினை செய்யாமல், இந்த அறிவிப்பைச் செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குழப்பங்கள், குளறுபடிகள் நிறைந்தது. மோசடியானது. ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் முடிந்த பின்னர் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்பது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத நடைமுறையாகும்.

இவ்வறிவிப்பினை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்று அனைத்து சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டு ஏற்கனவே எழுப்பபட்டுள்ள அனைத்து குறைபாடுகளையும் களைந்து முறையான தேர்தல் அறிவிப்பினை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு என்பது தேர்தலை நடத்தவா? நிறுத்தவா? என்ற கேள்வி எழுகின்றது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கான தேர்தல் குறித்தும் மாவட்ட ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்துவது குறித்தும் எவ்வித தெளிவும் இல்லை.

மொத்தத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த விருப்பம் இல்லாத அ.தி.மு.க. அரசு குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்துவதற்கான வழிவகைகளை உருவாக்கி வருகின்றது. இத்தகைய குழப்பங்களின் காரணமாக நீதிமன்றத்தால் தேர்தல் நிறுத்தப்பட்டால் பிறர் மீது பழி சுமத்தி தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளும் ஜனநாயக விரோத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோதப்போக்கிற்குத் தமிழகத் தேர்தல் ஆணையம் துணைபோவது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் இப்போக்கிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். முறைகேடான தேர்தல் அறிவிப்புக்கு யாராவது நீதிமன்றத்தில் தடை வாங்கினால், எதிர்க்கட்சிகளின்மீது பழியைப் போடலாம் என்பதே ஆளுங்கட்சியின் திட்டமெனவும் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரகப் பகுதிகளின் அடித்தளத்திற்கான முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. மக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆட்சியாளர்கள் உள்ளாட்சித் தேர்தலை படிப்படியாக நடத்த உறுதியாக இருப்பது, அதிகாரப்பூர்வமாக வெளிவந்து இருக்கிறது. சென்ற உள்ளாட்சித் தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலையும் நிறுத்தக் கூடிய முயற்சியில், தி.மு.க. வழக்கின் மூலம் ஈடுபட்டு இருப்பது மக்களுக்கு எதிரானது, ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது வேடிக்கையானதும், தமிழக மக்களை ஏமாற்றும் வேலையுமாகும். இன்றைக்கு தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் என்பதற்கு புதியதொரு விளக்கம் தர முனைந்திருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலே அல்லாமல் வேறில்லை’ என்று கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆளும் அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்கத் தயங்கும் நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்ற தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளதை விமர்சிக்க எவ்வித அருகதையும் இல்லை. அனைத்து நிலைகளிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக சமூக நீதியைப் பேணும் வகையில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்ற திட்டத்தினால் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது’ என்று கூறியுள்ளார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஜனநாயக விதிமுறை மீறல், அப்பட்டமான ஜனநாயக முறைகேடு’ என்று கூறியுள்ளார்.

Next Story