போதையில் மகளிடம் தவறாக நடக்க முயற்சி: கணவர் மீது டி.வி. நடிகை பரபரப்பு புகார்


போதையில் மகளிடம் தவறாக நடக்க முயற்சி: கணவர் மீது டி.வி. நடிகை பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 4 Dec 2019 4:30 AM IST (Updated: 4 Dec 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

டி.வி. நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் மீது பரபரப்பு புகார் கூறி நேற்று பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் தனது கணவர் கொலை மிரட்டல் விடுப்பதோடு, குடிபோதையில் தனது மகளிடமும் தவறாக நடக்க முயற்சித்தார் என்று தெரிவித்தார்.

சென்னை,

வம்சம் டி.வி.தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ (வயது 31). இவர் சின்னத்திரையில் நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். திருமணமாகி முதல் கணவரை பிரிந்தநிலையில், ஈஸ்வர் (35) என்ற டி.வி. நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

முதல் கணவர் மூலம் ஜெயஸ்ரீக்கு 9 வயதுடைய மகள் இருக்கிறார். திருமணம் செய்துகொண்ட ஈஸ்வரும், ஜெயஸ்ரீயும் திருவான்மியூர் எல்.பி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு கணவர் ஈஸ்வர் காலால் எட்டி உதைத்து தாக்கியதில் காயமடைந்த ஜெயஸ்ரீ தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து கொடுத்த தகவலின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் நடிகர் ஈஸ்வர் மீதும், அவரது தாயார் சந்திரா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த வழக்கில் நடிகர் ஈஸ்வரும், அவரது தாயார் சந்திராவும் கைது செய்யப்பட்டனர். ஈஸ்வர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சந்திரா கோர்ட்டு மூலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை நடிகை ஜெயஸ்ரீ தனது 9 வயது மகளுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை அவர் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கும் தாய் என்பதை தெரிந்துகொண்டு ஈஸ்வர் அவராகவே விரும்பி என்னை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் என்னிடமும், எனது மகளிடமும் அன்பாகத்தான் நடந்து கொண்டார். நாட்கள் செல்ல செல்ல அவர் சுயரூபம் வெளிப்பட்டது. அவர் போதைக்கு அடிமையானவர் என்று தெரிய வந்தது.

கஞ்சா பயன்படுத்துவார். போதை ஊசி போட்டுக் கொள்வார். சூதாட்ட பழக்கமும் அவரிடம் இருந்தது. இதனால் தினமும் என்னை அடித்து உதைத்து துன்புறுத்தினார்.

போதையில் நான் என்று நினைத்து எனது மகளை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயற்சித்தார். இதையெல்லாம் தாங்கிக்கொண்டு பொறுமையாக அவருடன் வாழ்ந்தேன்.

இந்தநிலையில் இன்னொரு டி.வி. நடிகையோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த நடிகைக்கும் திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். அந்த நடிகையை வேண்டுமென்றே எனது வீட்டுக்கு அழைத்து வருவார். என் கண்முன்னே அந்த நடிகையை கட்டிப்பிடித்து சல்லாபத்தில் ஈடுபடுவார். அந்த நடிகையிடம் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். அவர் என் பேச்சை கேட்கவில்லை.

இதில் இருந்துதான் பிரச்சினை அதிகமானது. சொத்து வாங்குவதற்காக ரூ.30 லட்சம் பணமும், 47 பவுன் நகையும் கொடுத்தேன். ஆனால் அந்த சொத்தை என் பெயருக்கோ, அவரது பெயருக்கோ எழுதாமல், அவரது தாயார் பெயருக்கு எழுதிவிட்டார். இதுபற்றி கேட்டபோது என்னை அடித்து உதைத்தார்.

அவரது மோசமான நடவடிக்கைகளுக்கு அவரது தாயாரும், தந்தையும் உடந்தையாக இருந்தனர். எனது கணவருடன் பழகும் டி.வி. நடிகை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது கணவரிடம் இழந்த நகை மற்றும் பணத்தை மீட்டுத்தர வேண்டும். எனக்கு தினமும் குறிப்பிட்ட டி.வி. நடிகையிடம் இருந்தும், எனது கணவர் தரப்பில் இருந்தும் கொலை மிரட்டல் வருகிறது.

எனக்கும், எனது மகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கமிஷனரிடம் கேட்டுள்ளேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story