நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு; தமிழக என்ஜினீயர் சாதனை - நாசா உறுதி செய்தது


நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு; தமிழக என்ஜினீயர் சாதனை - நாசா உறுதி செய்தது
x
தினத்தந்தி 4 Dec 2019 12:00 AM GMT (Updated: 4 Dec 2019 4:45 AM GMT)

நிலவில் விழுந்து 3 மாதங்களான நிலையில், விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்களை தமிழக என்ஜினீயர் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இதை ‘நாசா’ உறுதி செய்துள்ளது.

சென்னை,

நிலவின் தென் துருவம், இதுவரை உலகின் எந்தவொரு நாட்டினாலும் ஆராய்ந்து அறியப்படவில்லை.

இந்த நிலையில்தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி அதிகாலை நேரத்தில் நிலவின் தென்துருவப்பகுதியில் மெல்ல மெல்ல தரையிறங்கும் என்று இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்தது.

ஆனால் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

இதனால் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவ பகுதியில் மெல்ல தரையிறங்க முடியாமல் போய்விட்டது.

இது இந்தியாவை மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த விக்ரம் லேண்டர், தென்துருவத்தில் இருந்து 600 கி.மீ. தொலைவில் மோதி விழுந்து கிடந்தது.

விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இஸ்ரோவும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு நாசாவும் கடும் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் இந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவில்லை.

நிலவை ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, ஏற்கனவே எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டரை அனுப்பி இருந்தது.

அந்த எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் தரை இறங்க திட்டமிட்டிருந்த இடத்தை கடந்த செப்டம்பர் 17-ந்தேதி கடந்து சென்றபோது, படம் எடுத்து அனுப்பியது. ஆனால் அதில் விக்ரம் லேண்டர் தெரியவில்லை.

விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து 150 கி.மீ. உயரத்தில் இருந்து அந்த படத்தை எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா படம் பிடித்தபோது, அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து, நிலவின் நிழல் இருந்ததால், அதில் விக்ரம் லேண்டர் மறைக்கப்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறினர்.

மீண்டும் அக்டோபர் 14-ந்தேதி, 15-ந்தேதி அந்த இடத்தை எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா கடந்து சென்றபோது படங்களை எடுத்து அனுப்பியது.

கடைசியாக கடந்த மாதம் 11-ந்தேதியும் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா படம் எடுத்து அனுப்பியது.

இந்த படங்கள் அனைத்தையும் நாசா தனது இணையதளத்தில் வெளியிட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட பலரும் பதிவிறக்கம் செய்து ஆராய்ந்து இருக்கிறார்கள்.

அப்படி ஆராய்ந்தவர்களில் ஒருவர்தான், தமிழக என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன்.

குறிப்பாக செப்டம்பர் 7-ந்தேதிக்கு முன்னரும், பின்னரும் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா எடுத்த படங்களை ஒப்பீடு செய்து பார்த்து ஆராய்ந்தார். அதில் செப்டம்பர் 7-ந்தேதிக்கு முந்தைய படங்களுக்கும், அதற்கு பிந்தைய படங்களுக்கும் இடையே நிலவின் தென்துருவ பகுதியின் மேற்பரப்பில் சில தாக்கங்களையும், மாறுபாடுகளையும் கண்டறிந்தார்.

மேலும், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து 750 மீட்டர் வட மேற்கில் விக்ரம் லேண்டரின் பாகத்தை முதன் முதலாக கண்டறிந்து சாதனை படைத்துள்ளார்.

நவம்பர் 11-ந்தேதி நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா அனுப்பிய படத்தில் விக்ரம் லேண்டர் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளம், விக்ரம் லேண்டரின் பாகம் தெரிய வந்துள்ளது.

தனது கண்டுபிடிப்பு குறித்து சண்முக சுப்பிரமணியன் நாசாவுக்கு தெரியப்படுத்தினார். அத்துடன் டுவிட்டரில் பதிவுகளையும் வெளியிட்டார்.

அதை நாசாவின் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் கேமரா விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து இப்போது சண்முக சுப்பிரமணியனின் கண்டுபிடிப்பு சரிதான் என உறுதி செய்துள்ளது.

இது குறித்து அவருக்கு நாசா சார்பில் எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் துணை திட்ட விஞ்ஞானி ஜான் கெல்லர் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், “விக்ரம் லேண்டரின் சிதைந்து போன பாகங்கள் கண்டுபிடிப்பு குறித்த உங்கள் இ-மெயிலுக்கு நன்றி. விக்ரம் லேண்டர் தரையிறங்கும் தேதிக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட படங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிக்கும் இடத்தை எல்.ஆர்.ஓ. ஆர்பிட்டர் குழு உறுதி செய்துள்ளது. இந்த தகவல்களை பயன்படுத்தி, அந்தப் பகுதியில் எல்.ஆர்.ஓ. கேமரா குழு கூடுதல் தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் விக்ரம் லேண்டர் விழுந்து தாக்கம் ஏற்பட்ட இடத்தையும், அந்த இடத்தை சுற்றிலும் விக்ரம் லேண்டரின் சிதைந்து போன பாகங்களையும் கண்டறிந்துள்ளது. உங்கள் கண்டுபிடிப்புக்கு பாராட்டுகள்” என கூறப்பட்டுள்ளது.

இப்போது விக்ரம் லேண்டர் விழுந்த இடம், பாதிப்பு, சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ள விக்ரம் லேண்டர் சிதைவு இடங்கள் ஆகியவற்றை காட்டும் படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆன நிலையில் அதன் சிதைந்த பாகங்களை தமிழக என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்திருப்பது அவருக்கு பாராட்டுகளை அள்ளிக்குவித்து வருகிறது.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத்தலைவரும் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை, என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியத்தை அவருடைய வீட்டில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:-

அமெரிக்கா நாட்டு இளைஞர்கள் தங்களுடைய விஞ்ஞான தகவல்களை நாசாவுடன் பகிர்ந்துகொள்வதால் அவர்கள் நிறைய சாதிக்க முடிகிறது. வளர்ந்த நாடுகளில் இதேபோன்று இளைஞர்களின் பங்களிப்பு இருப்பதை பார்க்க முடிகிறது. நம் நாட்டிலும் இவரை போன்ற இளைஞர்கள் பல்வேறு சாதனைகளை செய்ய முன்வந்திருப்பது வரவேற்கதக்கது. இது அவருக்கும், நாட்டுக்கும் உயர்வை தரும். இவருடைய செயல்பாடு வெளிநாடுகளில் மட்டும் தான் சாதனை படைக்க முடியும் என்பதில்லை. நம்மாலும் சாதிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story