அயோத்தி தீர்ப்பை கண்டித்து போராட்டம்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க டி.ஜி.பி.க்கு தெரியும் ஐகோர்ட்டு கருத்து


அயோத்தி தீர்ப்பை கண்டித்து போராட்டம்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க டி.ஜி.பி.க்கு தெரியும் ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 5 Dec 2019 4:30 AM IST (Updated: 5 Dec 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

‘அயோத்தி தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்ட வழக்கு விசாரணையின்போது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க தமிழக டி.ஜி.பி.க்கு தெரியும்’ என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து கூறியுள்ளது.

சென்னை,

இந்து முன்னேற்ற கழகத் தலைவர் கே.கோபிநாத். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு பின்னர் மத ஒற்றுமைக்கு எதிராக நாட்டில் எந்த ஒரு அமைப்பும் போராட்டம் நடத்தவில்லை. இந்தநிலையில், இந்த தீர்ப்பை கண்டித்து வருகிற 6-ந்தேதி (நாளை) முஸ்லிம் அமைப்பினர் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதற்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் தம்பித்துரை, ‘முஸ்லிம் அமைப்புகள் சார்பில் டிசம்பர் 6-ந்தேதி போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மாநிலம் முழுவதும் 80 மனுக்கள் வந்துள்ளது. இந்த மனுக்கள் மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் 5 மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன. 75 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது’ என்றார்.

அபராதம்

முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜா முகமது, ‘மனுதாரர் பொதுநல வழக்கை தவறாக பயன்படுத்துவதால், அவருக்கு அபராதம் விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘முஸ்லிம் அமைப்புகளின் போராட்டத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்’ என்றார்.

டி.ஜி.பி.க்கு தெரியும்

அதற்கு நீதிபதிகள், ‘சட்டம்-ஒழுங்கை எப்படி நிலை நாட்டவேண்டும் என்பது தமிழக டி.ஜி.பி.க்கு தெரியும். போராட்டம் நடத்த யாராவது அனுமதி கேட்டால், அது குறித்து பரிசீலித்து முடிவு எடுப்பது போலீசாரின் பணி. அப்படி இருக்கும்போது, இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கில் நீதிபதிகள் உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கவில்லை.

Next Story