சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு ரத்து: மருத்துவத்துறையில் கடைநிலை ஊழியர்களுக்கு 8 மணி நேர சுழற்சி பணி - மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு


சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு ரத்து: மருத்துவத்துறையில் கடைநிலை ஊழியர்களுக்கு 8 மணி நேர சுழற்சி பணி - மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Dec 2019 11:30 PM GMT (Updated: 6 Dec 2019 11:26 PM GMT)

மருத்துவத்துறையில் கடைநிலை ஊழியர்களுக்கு 8 மணி நேர சுழற்சி பணி வழங்க வேண்டும் என்றும், இதற்கு எதிராக சுகாதாரத்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

மதுரை,

தமிழக மருத்துவத்துறை அனைத்து பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்க தலைவர் வெங்கடாசலம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக தொழில்நுட்பனர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் 8 மணி நேரம் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதே துறையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், சமையல் பணியாளர்கள், ஆண் மற்றும் பெண் செவிலிய உதவியாளர்கள், முடி திருத்துவோர், சலவை பணியாளர்கள், அறுவை சிகிச்சை அரங்கு ஊழியர்கள் உள்ளிட்ட டி’ பிரிவு பணியாளர்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.

அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எங்களது கோரிக்கையை பரிசீலிக்குமாறு சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது. ஆனால் எங்களது கோரிக்கையை நிராகரித்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டார். அந்த உத்தரவில், ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு கடைநிலை பிரிவு ஊழியர்களின் உதவி அதிக அளவில் தேவைப்படும். அதனால் அவர்களுக்கு 8 மணி நேர சுழற்சி பணி திட்டத்தை அமல்படுத்த முடியாது என கூறப்பட்டிருந்தது. எங்களது கோரிக்கையை நிராகரித்து சுகாதாரத்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் திருமுருகன், -அரசு ஆஸ்பத்திரிகளில் கடைநிலை ஊழியர்களை விதிகளுக்கு புறம்பாக கூடுதல் நேரம் பணியாற்றும்படி நிர்ப்பந்திப்பது சட்டவிரோதம்- என்றார்.

அதற்கு அரசு வக்கீல், மருத்துவத்துறையில் டி’ பிரிவு ஊழியர்களை 12 மணிநேரம் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்துவது இல்லை. 1999-ம் ஆண்டு முதல் 8 மணி நேர வேலை திட்டமே அமலில் உள்ளது என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த சுகாதாரத்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Next Story