மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு எவ்வளவு இடம்? கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை + "||" + How much space for whom in the local elections With allied party executives Edapadi Palanisamy Consulting

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு எவ்வளவு இடம்? கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு எவ்வளவு இடம்? கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் - எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு எவ்வளவு இடம் என்பது குறித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சென்னை,

தமிழகத்தில் கிராம அளவில் மட்டும் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்ட பகுதிகளில் கிராம அளவில் தேர்தல் நடக்க இருக்கிறது.


இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், ஆளுங்கட்சியான அ.தி.மு.க. பெருவாரியான இடங்களில் வெற்றி பெற வியூகம் அமைத்து வருகிறது. இதற்காக தனது கூட்டணி கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க, பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது.

இதையொட்டி, கூட்டணி கட்சி தலைவர்களுடன் உள்ளாட்சி தேர்தலில் இடங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வருமாறு நேற்று மாலை திடீரென்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பா.ஜ.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.டி.ராகவன், பா.ம.க. சார்பில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, த.மா.கா. சார்பில் அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பொருளாளர் கோவை தங்கம், தே.மு.தி.க. சார்பில் துணை செயலாளர் பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.

கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளிடமும் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உள்ளாட்சி தேர்தல் குறித்து கருத்து கேட்டனர். அப்போது, கூட்டணி கட்சி நிர்வாகிகள் தங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த வார்டுகள் பட்டியலை அவர்களிடம் வழங்கினர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி குழு அமைக்கப்பட்டு, உள்ளாட்சி தேர்தலில் இடங்கள் பகிர்வது தொடர்பாக உரிய முடிவுகளை எடுப்போம் என்று தெரிவித்தார்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் நம்முடைய கூட்டணி அதிகமான இடங்களை கைப்பற்ற கூட்டணி கட்சிகள் பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, “பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. உள்ளாட்சி தேர்தலை எப்படி அணுகுவது என்பது குறித்து விவாதித்தோம். எந்தெந்த இடங்களை பகிர்ந்துகொள்வது என்பது குறித்தும் பேசினோம். ஓரிரு நாட்களில் குழு அமைத்து அ.தி.மு.க.வுடன் மீண்டும் பேசுவோம். போட்டியிடும் இடங்களில் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை பொறுத்து நாங்கள் இடங்களை பிரித்துக்கொள்வோம்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியே வந்தார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, “அ.தி.மு.க. தலைமையில் இருந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக திடீரென அழைப்பு விடுத்தார்கள். அதன்பேரில் நாங்கள் பங்கேற்றோம். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. நல்ல முறையில் தேர்தலை சந்திக்கவேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இட ஒதுக்கீடு, சதவீதங்கள் உள்பட மற்ற விஷயங்கள் குறித்து எதுவும் பேசவில்லை. பொதுப்படையாக எப்படி தேர்தலை அணுகவேண்டும் என்பது குறித்து, அ.தி.மு.க. தரப்பில் அவர்கள் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

பா.ஜ.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் கலந்து ஆலோசித்துவிட்டு, அடுத்தகட்ட விஷயங்கள் குறித்து முடிவு எடுப்போம். நேரடி தேர்தல், மறைமுக தேர்தல் குறித்து எது நல்லது? என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்திருந்தோம். தற்போது மறைமுக தேர்தல் முடிவாகியிருக்கிறது. இதனை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஏனென்றால் நாங்கள் நேரடி தேர்தலிலும், மறைமுக தேர்தலிலும் வெற்றி பெற்று வந்திருக்கிறோம். எனவே எந்த தேர்தல் என்றாலும் எங்களுக்கு ஒன்று தான். எது சரியாக இருக்கும் என்பது தொடர்பாகவே கருத்து முன்பு தெரிவிக்கப்பட்டது. தற்போதைய சூழலில் தேர்தல் நடப்பதே சரியாக இருக்கும்” என்றார்.

பின்னர், வெளியே வந்த த.மா.கா. மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், தே.மு.தி.க. கொள்கைபரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, “உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். தேர்தலை கண்டு எங்கள் கூட்டணிக்கு அச்சம் இல்லை. தேர்தலை நாங்கள் எதிர்கொள்வோம்” என்றனர்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. அந்தக் கூட்டம் முடிந்தவுடன் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க.வுக்கு சாதகமான வார்டு பகுதிகள் எவை? எவை? என்பது குறித்தும், அதற்கான பட்டியலையும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் மாவட்ட செயலாளர்கள் வழங்கினர். இவற்றில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய வார்டுகள் எவை? எவை? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டணி கட்சிகளிடம் முன்னதாக நடைபெற்ற இடங்கள் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை விவரங்களை மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.

பின்னர், கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘கூட்டணி கட்சி பிரதிநிதிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து அவர்களுக்கு கணிசமான இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும், இதற்காக அவர்களிடம் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நாம் வெற்றியை இழந்து விடக்கூடாது. அதிகப்படியான வார்டுகளை நாம் வென்றால் தான், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை பெற முடியும். வெற்றி ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்படுங்கள்’ என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘ஒவ்வொரு வார்டிலும் அங்கு செல்வாக்கு பெற்றுள்ளவர்களை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும். ஒரே வார்டுக்கு கூட்டணி கட்சிகளிடையே போட்டி இருந்தால் அதனை சுமுகமாக தீர்க்க பாருங்கள். இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் கட்சி தலைமைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கி விடாதீர்கள்’ என்று அவர் பேசியதாக மாவட்ட செயலாளர்கள் சிலர் தெரிவித்தனர்.