பா.ஜனதா ஆட்சியால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீளவே முடியாது ப.சிதம்பரம் பேட்டி


பா.ஜனதா ஆட்சியால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீளவே முடியாது ப.சிதம்பரம் பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2019 4:30 AM IST (Updated: 8 Dec 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா ஆட்சியால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீளவே முடியாது என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

ஆலந்தூர்,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி 106 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையான முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுதந்திர காற்றை சுவாசிப்பதிலே மகிழ்ச்சி. காஷ்மீர் உள்பட நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. பாசிச அரசு முறையை நோக்கி நாடு நடந்துகொண்டு இருக்கிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பா.ஜனதாவை கடுமையாக எதிர்ப்பது தமிழக மக்கள் தான். தமிழக மக்களின் எதிர்பார்ப்பு நாடு முழுவதும் பரவ வேண்டும்.

என் மனஉறுதியை குலைக்க வேண்டும் என்பதற்காகவே சிறையில் அடைத்தார்கள். என் மனஉறுதி ஒருநாளும் குறையாது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் சோனியா காந்தியை சந்தித்து பேசியபோது, நாட்டு மக்களை சந்தித்து பேசப்போவதற்கு வாழ்த்தினார்கள். இந்தியாவின் மோசமான பொருளாதார நிலையை மக்களிடம் எடுத்துச் சொல்வேன்.

நிர்பயா நிகழ்வுக்கு பின் நிதி மந்திரியாக பொறுப்பேற்றபோது ரூ.3,100 கோடி ஒதுக்கினேன். இந்த நிர்பயா நிதியை பெண்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்த வேண்டும். இந்த நிதியை பல மாநிலங்கள் பயன்படுத்தவில்லை. தமிழகத்தில்கூட நிர்பயா நிதி பயன்படுத்தப்படவில்லை. இது வருந்தத்தக்கது.

உத்தரபிரதேசம் உள்பட நாடு முழுவதும் பெண்களுக்கு கொலைக்களமாக மாறிக்கொண்டு இருக்கிறது. இதை தடுக்க வேண்டியது பெண்களும், அரசும் மட்டுமல்ல. பெண்களை பாதுகாப்பேன் என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு ஆண் மகனும் தடுக்க வேண்டும்.

2004-ல் இருந்து 2010-ம் ஆண்டு வரை பொருளாதாரம் 9 சதவீதமாக வளர்ச்சி அடைந்தது. பா.ஜனதா சொல்லும் வளர்ச்சி 8-ல் தொடங்கி 4.5 சதவீதத்துக்கு வந்துள்ளது. 4.5 சதவீதம்கூட பொய்யான எண்ணிக்கை. இது இந்தியாவை வளர்ச்சி நோக்கி கொண்டுசெல்லாமல் பள்ளத்தாக்கில் தள்ளுவதாக உள்ளது.

பா.ஜனதா தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீளவே முடியாது. எங்களிடம் ஆலோசனை கேட்பார்களா என்பதை கேட்டு சொல்லுங்கள். நான் ஜாமீன் நிபந்தனையை மீறிவிட்டதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். நான் வழக்கு பற்றி பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார். அப்போது மழை பெய்ததால் குடைபிடித்தபடி ப.சிதம்பரம் பேசியதாவது:-

பா.ஜனதாவின் நோக்கமே ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்குவதுதான். கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.பி.க்கள் 2 பேர் வீடுகளில் பா.ஜனதா அரசு சோதனை செய்தது. இதற்கு பயந்து மற்றொரு எம்.பி. பா.ஜ.க.வில் இணைந்துவிட்டார். ஆந்திராவிலும் இதே நிலைமைதான்.

பா.ஜனதா கட்சி கங்கை ஆறு என்றும், அதில் மூழ்கி குளித்தால் அனைத்து பாவங்களும் நீங்கிவிடும் என்றும் அக்கட்சி கருதுகிறது. நான் ஒருபோதும் கங்கையில் (பா.ஜனதா) குளிக்கமாட்டேன்.

டெல்லியில் வெங்காயம் விலை ரூ.200-ஐ தொட்டுவிட்டது. கார் கம்பெனியில்கூட ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்த சூழ்நிலையிலும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை பறித்து 800 முதலாளிகளுக்கு வழங்கி இருக்கிறார்கள். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் வரியை மேலும் கூட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நான் 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். சிறையில் இருப்பது பெரிய விஷயம் அல்ல. காமராஜர், வ.உ.சி. போன்றவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். அதனால் சிறையில் இருந்தது மகிழ்ச்சிதான். சிறை கட்டிலில் படுத்ததால் என் கழுத்து எலும்பு சரியாகி உள்ளது. காங்கிரஸ் இயக்கம் இருக்கும் வரை, தொண்டர்கள் இருக்கும் வரை என்னை வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, கார்த்தி சிதம்பரம் எம்.பி., பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story