உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக முடிவு


உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக முடிவு
x
தினத்தந்தி 8 Dec 2019 8:00 PM IST (Updated: 8 Dec 2019 8:00 PM IST)
t-max-icont-min-icon

திமுக ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாடும் மு.க.ஸ்டாலினின் கருத்து ஒருமனதாக ஏற்கப்பட்டது.

சென்னை,

சென்னை தி-நகரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திமுகவின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்பாணைக்கு  திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

அதிமுக அரசிடம் மாநில தேர்தல் ஆணையம் சரணடைந்து விட்டதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றாமல் தேர்தல் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.

“புதிய மாவட்டம், ஊரக உள்ளாட்சிக்கு மட்டும் தேர்தல் என அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாடுவோம்” என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாடும்  மு.க.ஸ்டாலினின் கருத்தை திமுக செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.

மேலும், “உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க தயார். தேர்தல் வேண்டாம் என சொல்லவில்லை, சட்டப்படி நடத்தப்பட வேண்டும் என்று தான் சொல்கிறோம். மக்கள் குரலே மகேசன் குரல், மக்கள் என்றும் நம் பக்கமே என்ற நம்பிக்கையில் தேர்தலை சந்திக்க தயார்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story