வெங்காய விலை குறைகிறது !! எகிப்தில் இருந்து இறக்குமதி
எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தமிழகம் வந்தடைந்துள்ளதால், வெங்காய விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
வரத்து குறைவால் கடந்த சில நாட்களக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200 வரை விற்றது. இதனால் ஆங்காங்கே வெங்காய திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.
நாடு முழுவதும் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், கப்பல் மூலம் குளிர்சாதன கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு மராட்டிய மாநிலம் மும்பை வந்தடைந்தது.
அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயம் தற்போது தமிழகம் வந்தடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முதற்கட்டமாக 60 டன் அளவிலான எகிப்து வெங்காயம் இன்று வந்திறங்கியது. இதில் ஒரு சில வெங்காயம் 200 கிராம் முதல் 600 கிராம் வரை எடை கொண்டதாக உள்ளது. இந்த வெங்காயம் நாளை முதல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், ஒரு கிலோ 100 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெங்காய விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் காலையில் திருச்சி வந்தடைந்த 30 டன் எகிப்து வெங்காயம், பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. திருச்சியிலும் ஒரு கிலோ எகிப்து வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வழக்கமான நிறம் போல் அல்லாமல் சற்றே கருப்படைந்து வித்தியாசமாக இருப்பதால் எகிப்து வெங்காயத்தை வாங்க சில்லறை வியாபாரிகள் தயக்கம் காட்டுவதாக மொத்த வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், திருச்சி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
திண்டுக்கல் வெங்காயப்பேட்டைக்கு எகிப்து மற்றும் நைஜீரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 டன் அளவிலான வெங்காயம் வந்துள்ளது. வெளிநாட்டு வெங்காயம் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், உள்நாட்டு பெரிய வெங்காயம் கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் புதியது கிலோ 80 ரூபாய்க்கும், பழையது கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த வாரத்தை காட்டிலும் விலை குறைந்துள்ளதாகக் கூறும் வியாபாரிகள், வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என தெரிவித்துள்ளனர்.
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் இருக்கும் லீ பஜார் வர்த்தக சங்க வெங்காய மண்டிகளில், வரத்து குறைவால் வெங்காயம் விலை உயர்ந்ததோடு விற்பனையும் குறைந்தது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்திலிருந்து லாரிகளில் வெங்காய மூட்டைகள் வரத் தொடங்கியதால், வெங்காய விலை 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் 90 முதல் 140 ரூபாய் வரை விற்பனையான பெரிய வெங்காயம், தற்போது விலை குறைந்து 60 முதல் 120 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல் சின்னவெங்காயம் ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story