திருச்சி, திண்டுக்கல்லுக்கு வந்த 230 டன் வெளிநாட்டு வெங்காயம் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை
திருச்சி, திண்டுக்கல்லுக்கு வெளிநாடுகளில் இருந்து 230 டன் வெங்காயம் வந்து உள்ளது.ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை ஆனது.
திருச்சி,
தட்டுப்பாடு, விலை உயர்வு காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெங்காயம் அகில இந்திய அளவில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசப்படும் ஒரு பொருளாகி விட்டது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. திருச்சியில் முதல் தரமான பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. உருவத்தில் சிறிய, ஈரமான வெங்காயம் ஒரு கிலோ ரூ.70 முதல் கிடைத்து வந்தது.
இந்நிலையில் எகிப்து நாட்டில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் நேற்று திருச்சி வெங்காய மண்டிக்கு வந்தது. எகிப்தில் இருந்து கப்பல் மூலம் மும்பை துறைமுகத்தில் இறங்கிய இந்த வெங்காயத்தை 3 லாரிகளில் நேற்று திருச்சிக்கு கொண்டு வந்து இறக்கினார்கள். இந்த வெங்காயம் சற்று கருமையான நிறத்தில் காணப்பட்டது.
தட்டுப்பாடு நீங்கியது
இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தொடர்பாக மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில் ‘எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதால் பெரிய வெங்காயம் தட்டுப்பாடு நீங்கி விட்டது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இன்றி தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், ஓட்டல் அதிபர்கள் வாங்கி சென்று உள்ளனர். ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறோம்’ என்றார். இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 50 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பப்பட்டன.
திண்டுக்கல்லுக்கு...
இதே போல் எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு 200 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் திண்டுக்கல் வெங்காய தரகுமண்டிக்கு மூட்டை மூட்டையாக கொண்டுவரப்பட்டது.
மேலும் இந்த வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110-க்கு விற்கப்பட்டது. இதன் காரணமாக திண்டுக்கல்லில் ஓட்டல் நடத்துபவர்கள், காய்கறி வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தை வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story