வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக சென்னை-திருப்பதி சாலையில் ரூ.1 கோடியில் மரக்கன்றுகள் நடப்படும் பசுமை தீர்ப்பாயத்தில், நெடுஞ்சாலை ஆணையம் உறுதி
சென்னை-திருப்பதி சாலையில் ரூ.1 கோடியில் மரக்கன்றுகள் நடப்படும் என்று பசுமை தீர்ப்பாயத்தில், நெடுஞ்சாலை ஆணையம் உறுதி அளித்தது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.கோகுல்ராஜ், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2015-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2010-ம் ஆண்டு அகலப்படுத்தப்பட்டது. அப்போது, சாலையின் இருபுறமும் இருந்த 1,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதை முறையாக கடைபிடிக்கவில்லை. எனவே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக தலா 10 மரக்கன்றுகள் நடுவதற்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாயத்தலைவர் ஏ.கே.கோயல், நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக தலா 10 மரக்கன்றுகளை நடுவதற்காக ரூ.1 கோடி வனத்துறைக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், ‘இந்த மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்படுகிறது. மரக்கன்றுகள் நடுவதில் குறைபாடு இருந்தாலோ, மரக்கன்றுகளை நடாமல் விட்டாலோ மனுதாரர் மீண்டும் பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம்’ என்று உத்தரவு பிறப்பித்தது.
Related Tags :
Next Story