பி.இ. பட்டதாரிகளும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதலாம் - தமிழக அரசு அரசாணை


பி.இ. பட்டதாரிகளும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதலாம் - தமிழக அரசு அரசாணை
x
தினத்தந்தி 10 Dec 2019 10:30 PM GMT (Updated: 10 Dec 2019 10:00 PM GMT)

பி.இ. பட்டதாரிகளும் பி.எட். முடித்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று கணினி ஆசிரியராகலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

சென்னை,

தமிழக அரசுபணிகளில், புதிதாக சேருவோர் மற்றும் ஏற்கனவே பணியில் பணியாற்றி, பதவி உயர்வு கோரி விண்ணப்பித்தவர்கள் அரசாணையில் உள்ள படிப்புகள் தவிர பிற பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் புதிய படிப்புகளில் பட்டம் பெறுவதால் சான்றிதழ் சரிபார்ப்பில் பிரச்சினை இருந்து வருகிறது.

எந்தெந்த பட்டப்படிப்புகள் ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது?, எவை இணையல்ல? என்பது குறித்து முடிவு செய்து அவற்றை அரசாணையாக வெளியிடுமாறு தமிழக உயர்கல்வித்துறைக்கு அரசு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதில் என்ஜினீயரிங் படித்து முடித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் வகையில் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் பதவிக்கு என்ஜினீயரிங் படிப்பில் சி.எஸ்.சி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால் இனி என்ஜினீயரிங் படிப்பில் ஐ.டி. படித்தவர்களும் அந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில், ஐ.டி., சி.எஸ்.சி. இணையான படிப்புகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பி.இ. பட்டதாரிகள் எந்த பிரிவில் படித்து பட்டம் பெற்று இருந்தாலும், அவர்கள் பி.எட். படிப்பை முடித்து ஆசிரியர் தகுதி தேர்வு(டெட்) எழுதி 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கணித ஆசிரியர் ஆகலாம் என்ற பரிந்துரையை வழங்கி இருக் கிறது.

இதுபோல் இணையான படிப்புகள் குறித்த விவரம் அந்த அரசாணையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பி.இ. படிப்பை படித்து, பி.எட். முடித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கணினி ஆசிரியர் ஆகலாம் என்ற அரசின் அறிவிப்பாணை குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்த கல்வி தகுதியின் அடிப்படையில்தான் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த கவுன்சில் எந்த பட்டப்படிப்பு படித்து, பி.எட். முடித்தவர்களும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் என்று அறிவித்துள்ளது. அந்த முறையைதான் பின்பற்ற வேண்டும் என்று அரசும் எங்களிடம் தெரிவித்து இருக்கிறது. எந்த பட்டப்படிப்பும் என்று வரும்போதே, பி.இ. பட்டப்படிப்பும் அதில் அடங்கிவிடும். இது ஏற்கனவே உள்ள நடைமுறைதான்” என்று கூறினார்கள்.

Next Story