உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு - அரசியல் கட்சியினர் அதிர்ச்சி


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு - அரசியல் கட்சியினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 11 Dec 2019 5:30 AM IST (Updated: 11 Dec 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது தங்களுக்கு சொந்தமான சொத்துகள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கி வரும் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த வேட்புமனுக்கள் 17-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.

அதாவது சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் நடைமுறையில் இருப்பது போன்று வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது, அதனுடன் தங்களுடைய பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்துகள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் பெயர்களிலும் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து குறித்த விவரங்களை வேட்புமனுவுடன் இணைத்து வழங்க வேண்டும் என்பது நியதி. அடுத்தடுத்த தேர்தல்களில் இவர்கள் தாக்கல் செய்யும் சொத்துப்பட்டியலை வருமானவரி துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நடைமுறை முதன் முறையாக தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் அமலுக்கு வந்து உள்ளது.

எனவே நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் தங்கள் பெயரிலும், தங்கள் குடும்பத்தினர் பெயர்களிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த சொத்து பட்டியலில் வேட்பாளர்களின் குடும்பத்தினர் பெயர்களில் உள்ள சொத்துகள், விவசாய நிலங்கள், இதர சொத்துகள், வங்கியில் பெறப்பட்டு உள்ள கடன்கள், முதலீடுகள், பண இருப்பு உள்ளிட்ட விவரங்களும் முழுமையாக கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு, ஒன்றிய வார்டுகள் மட்டுமின்றி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களும் வேட்புமனுவுடன் கண்டிப்பாக சொத்து விவர பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். அதில் நோட்டரி பப்ளிக் உள்ளிட்ட தகுதியானவர்கள் முன்னிலையில் உறுதிமொழி அளிக்கப்பட்ட பத்திரங்களை வேட்புமனுவுடன் இணைக்க வேண்டும்.

கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் சுய உறுதிமொழியுடன் மனுக்களை தாக்கல் செய்யலாம். சொத்து பட்டியலுடன், வேட்பாளர்கள் தங்கள் மீது உள்ள வழக்குகள் மற்றும் தண்டனை விவரங்களை தெரிவிக்கும் வகையில் 3-ஏ என்ற உறுதிமொழி படிவத்தையும் வேட்புமனுவுடன் இணைத்து வழங்க வேண்டும்.

வேட்புமனுவுடன் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்து பட்டியல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும். வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது, சொத்து பட்டியலில் காட்டப்படாத சொத்துகள் இருந்து கண்டறியப்பட்டு, அதுகுறித்து உரிய ஆவணங்களுடன் ஆதாரப்பூர்வமாக புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுவை ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் காட்டியுள்ள வழிகாட்டுதல் படி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த திடீர் உத்தரவால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்த அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story