உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையர் உத்தரவு


உள்ளாட்சி  தேர்தலை  நேர்மையாக  நடத்த வேண்டும்   மாவட்ட கலெக்டர்களுக்கு  தேர்தல் ஆணையர்  உத்தரவு
x
தினத்தந்தி 12 Dec 2019 5:00 AM IST (Updated: 12 Dec 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், ஜனநாயக முறையிலும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவி இடங்களுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் அதிகாரிகளான 27 மாவட்ட கலெக்டர்களுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து ‘வீடியோ கான்பரன்சிங்’ (காணொலி காட்சி) மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல்

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி வழங்கிய அறிவுரைகள் வருமாறு:-

* தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

* பறக்கும்படை, இணையவழி கண்காணிப்பு, ‘வீடியோ’ ஒளிப்பதிவு செய்ய வேண்டும். நுண்பார்வையாளர்கள் மூலமாக தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

* மாவட்ட அளவில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

* தேதிவாரியாக செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

* அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும்.

* வாக்குச்சாவடி அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும்.

* துணை வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

வேட்பாளர் செலவின பட்டியல்

* கட்சி சார்ந்த தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிட அச்சகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

* வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* வாக்குப்பெட்டி மற்றும் வாக்குச்சாவடிக்கான பொருட்களை கொண்டு சேர்த்து வாக்குப்பதிவுக்கு தயாராக வேண்டும்.

* பதற்றமான மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

* தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வேட்புமனுத்தாக்கல் முதல் தேர்தல் முடிவு அறிவித்தல் வரையிலான புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* வேட்பாளர் செலவினம் தொடர்பான விலைப்பட்டியலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story