பாரதியாரின் சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு


பாரதியாரின் சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
x
தினத்தந்தி 11 Dec 2019 11:17 PM GMT (Updated: 11 Dec 2019 11:17 PM GMT)

பாரதியாரின் சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று பாரதியார் பிறந்தநாள் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நேற்று பாரதியாரின் 138-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. தினமணி பத்திரிகை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவில், மகாகவி பாரதியார் விருதையும், ரூ.1 லட்சத்துக்கான பொற்கிழியையும் மூத்த பாரதி ஆய்வாளர் இளசை மணியனுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

தலைசிறந்த கவிஞர்

கலாசாரம், இலக்கியம் மற்றும் தேசியத்துக்கு தினமணி தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவது பாராட்டுக்குரியது. எனது கவர்னர் பதவிக்காலம் முடிந்த பின்னரும் தினமணிக்கும் எனக்குமான உறவு தொடரும். பாரதியார் பன்முகத்தன்மை கொண்டவர். கவிஞர், பெண்ணுரிமைப் போராளி, பன்மொழி புலமை கொண்டவராகவும் விளங்கினார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக சுதந்திரப் போராட்ட வீரர்.

பாரதியார் தனது கவிதைகளில் வளமான கருத்துகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, இந்த சமூகத்தை மேம்படுத்தும் வகையில் எழுதியுள்ளார். எளிதாகவும், எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையிலும் இருப்பதால் இன்றைய குழந்தைகள்கூட பாரதியின் பாடல்களால் கவரப்படுகின்றனர். தொழிலாளர்களுக்கும், உழைக்கும் வர்க்கத்தினருக்கும், அடித்தட்டு மக்களுக்கும் கவிதை படைத்துள்ளார். அதுதான் 20 -ம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராக அவரை உயர்த்தியது.

இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்

அரசியல் களத்தில் பெண்களின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் பாரதியார் தான். பெண் உரிமைக்கும், பெண் கல்விக்கும் முக்கியத்துவம் அளித்த பாரதியார், நவீன இந்திய பெண்களால் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்த முடியும் என கருதினார். தமிழக இளைஞர்கள் மட்டுமின்றி, இந்த தேசத்தின் இளைஞர்கள் அனைவரும் பாரதியாரின் சிந்தனைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கம்

விழாவில், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியதாவது:-

வங்கக் கவிஞர் தாகூருக்கு வங்காளம் தருகிற மதிப்பு மரியாதையை, விடுதலை வேள்வியை வளர்த்த மகாகவி பாரதியாருக்கு தமிழ்ச் சமூகம் தரவில்லையே என்ற குறை இருக்கிறது. அது கண்டிப்பாகக் களையப்பட வேண்டும். விரைவிலேயே தமிழகம் கொண்டாடும் தலைசிறந்த பண்டிகையாக பாரதியார் பிறந்த நாள் உருவாக வேண்டும். எட்டயபுரத்தில் பாரதி பிறந்த நாளில் கருத்தரங்கம் நடத்துவது போல தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

இந்த விழாவில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், எழுத்தாளர்கள் பொன்னீலன், எஸ்.ராமகிருஷ்ணன், மூத்த பாரதி அறிஞர் சீனி விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வரவேற்றார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலை துணைத் தலைவர் (வர்த்தகப் பிரிவு) ஜெ.விக்னேஷ்குமார் நன்றி கூறினார்.

Next Story