மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது மரண அடிமு.க.ஸ்டாலின் பேட்டி + "||" + MK Stalin Interview

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது மரண அடிமு.க.ஸ்டாலின் பேட்டி

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது மரண அடிமு.க.ஸ்டாலின் பேட்டி
உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு சுப்ரீம் கோர்ட்டு மரண அடி கொடுத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்னவென்று இன்னும் வெளிவராத சூழ்நிலையில், ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் சில கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் வழக்கு தொடுத்த நிலையில், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், இடஒதுக்கீட்டின்படி உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தி இருந்தோம்.

அதை ஏற்றுக்கொண்டு இன்று (நேற்று) சில அறிவிப்புகளை சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ளது. தற்போதாவது மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் முழு விவரத்தை அதன் உணர்வை தெளிவாக தெரிந்துகொண்டு அரசியல் சட்ட அமைப்பை காப்பாற்ற முறையாக இந்த தேர்தலை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

அ.தி.மு.க.வுக்கு மரண அடி

கேள்வி:- இந்த தீர்ப்பு தி.மு.க.வுக்கு கொடுத்த சம்மட்டி அடி என்று சி.வி.சண்முகம் கூறியுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?.

பதில்:- அரசியல் கோணத்தில் பேசி இருக்கிறார். முழுத்தீர்ப்பு விவரம் இன்னும் வரவில்லை; வந்த பிறகு பதில் சொல்கிறேன். ஏற்கனவே இதே சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் அரசு தரப்பில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்துவோம் என்று சொல்லியிருந்தார்கள். அதில் எந்த சிக்கலும் இல்லை; முறையாகத்தான் பிரித்து வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், அது இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உணர்ந்த காரணத்தினால் தான் அந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று வழிகாட்டுதல் கொடுத்தது. எங்களுக்கு சம்மட்டி அடி என்று சொல்கிறார்களே, அவர்களுக்கு கொடுத்தது மரண அடி என்பதுதான் என்னுடைய பதில்.

ஜெயக்குமாருக்கு என்ன அறிவுரை சொல்ல?

கேள்வி:- அமைச்சர் ஜெயக்குமார் மக்களை சந்திப்பதற்கு தி.மு.க.வுக்கு திராணி இல்லை என்று கூறியிருக்கிறார். அதுகுறித்து உங்களுடைய கருத்து?.

பதில்:- மக்களை சந்திப்பதற்கு தி.மு.க. என்றும் தயாராக இருக்கிறது; நாங்கள் ஓடி ஒளியவில்லை. தேர்தலை நிறுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டாக இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டாக இருந்தாலும் எங்களுடைய கோரிக்கைகளில் இடம் பெறவில்லை. சுப்ரீம் கோர்ட்டே தெளிவாகக் கூறியிருக்கிறது. இந்த வழக்கு வந்தபோது சுப்ரீம் கோர்ட்டு என்ன சொல்லியிருக்கிறது என்றால், தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. இடஒதுக்கீடு, மறுவரையறை இவற்றையெல்லாம் ஒழுங்குபடுத்திவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இதற்கு பிறகு ஜெயக்குமாருக்கு என்ன அறிவுரை சொல்வது என்று தெரியவில்லை.

துரோகம் செய்யக்கூடிய ஆட்சி

கேள்வி:- குடியுரிமை சட்ட மசோதா குறித்து அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?.

பதில்:- அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் என்ன நிலை என்றால் இதை ஆதரித்து ஊடகத்திற்கு பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சார்பில் பேசிய எம்.பி.க்களும் அதை ஆதரித்து பேசி இருக்கிறார்கள். ஆதரித்து பேசிய இந்த சூழ்நிலையை பார்க்கின்றபொழுது, இந்த அ.தி.மு.க. ஆட்சியை இதுவரைக்கும் ஊழல் ஆட்சி, கொலைகார ஆட்சி, கொள்ளைக்கார ஆட்சி என்று சொல்லிக்கொண்டு இருந்தோம். இப்போது தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய ஆட்சியாகவும் இந்த அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது என்பதுதான் உண்மையான ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

கண்டனம்

மேலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்திருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.