ஊர் கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்வதை எதிர்த்த வங்கி மேலாளர் கொலை அ.தி.மு.க. செயலாளர் உள்பட 7 பேர் கைது
ஊர் கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்யவதை எதிர்த்த வங்கி மேலாளர் அடித்துக் கொல்லப்பட்டார்.
சிவகாசி,
ஊர் கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவரை தேர்வு செய்யவதை எதிர்த்த வங்கி மேலாளர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோட்டைப்பட்டி கிராமம் உள்ளது. அங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நள்ளிரவில் ஊர்க்கூட்டம் நடத்தினார்கள்.
அப்போது, அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளரான ராமசுப்பு (வயது 47) என்பவர், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்து இருந்தார். இந்த நிலையில் அந்த ஊர் கூட்டத்திற்கு சுப்புராம் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் ராமசுப்பு தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சுப்புராமின் சித்தப்பா விஜயகுமார் மகன் சதீஷ்குமார் (27) கூட்டத்திற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். மேலும் இதுபோன்ற கூட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், தனது அண்ணன் சுப்புராம் தேர்தலில் போட்டியிடுவதற்கு முறையாக விருப்ப மனு அளித்துள்ளதால் அவரையும் தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர், சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினார்கள். தாக்குதலில் பலத்த காயம் அடைந்து சுயநினைவை இழந்த சதீஷ் குமார் மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அங்கிருந்தவர்கள் சதீஷ்குமாரை காரில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது, சதீஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக தகவல் அறிந்ததும் வெம்பக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோட்டைப்பட்டியில் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
சம்பவம் பற்றி ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டைபட்டியை சேர்ந்த ராமசுப்பு, கணேசன், முத்துராஜ், ராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் உள்பட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார், அவரது வீட்டில் மூத்த மகன் ஆவார். எம்.பி.ஏ. பட்டதாரியான அவர், சிவகாசியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த சம்பவத்தில் கைதான 7 பேரில் செல்வராஜ் சத்துணவு அமைப்பாளர் ஆவார். சதீஷ்குமார் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தால் கோட்டைப்பட்டி கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story