பருவத்தேர்வு: 9-ம் வகுப்பு தமிழ் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? விசாரணை நடத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவு


பருவத்தேர்வு:   9-ம் வகுப்பு தமிழ் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா?   விசாரணை நடத்த பள்ளிக்கல்வி துறை உத்தரவு
x
தினத்தந்தி 13 Dec 2019 9:59 PM GMT (Updated: 13 Dec 2019 9:59 PM GMT)

9-ம் வகுப்பு 2-ம் பருவத்துக்கான தமிழ் தேர்வு வினாத்தாள் சில மாவட்டங்களில் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியானதாக கூறப்படுகிறது.

சென்னை,

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 11-ந் தேதி தொடங்கிய நிலையில், எஸ்.எஸ்.எல்.சி.க்கு நேற்று முதல் தேர்வு தொடங்கியது. இந்த 3 வகுப்புகளுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் கேட்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஏற்கனவே கடந்த காலாண்டு தேர்வின்போது பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள், தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய நாட்களில் செல்போன் செயலியிலும், சமூக வலைதளங்களிலும் வெளியானதால் அரையாண்டு தேர்வுக்கு ஒரே வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் பருவத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இந்த தேர்வுகளுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஒரே மாதிரியான வினாத்தாளை தயாரிக்க கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் 9-ம் வகுப்பு 2-ம் பருவத்துக்கான தமிழ் தேர்வு நேற்று நடந்தது. ஆனால் நேற்று முன்தினமே அதற்கான வினாத்தாள் சில மாவட்டங்களில் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்வுகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வெளியிட்டால், வினாத்தாள் கசிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Next Story