நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் உள்ளாட்சி வேட்மனு தாக்கல் விறுவிறுப்பு


நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் உள்ளாட்சி வேட்மனு தாக்கல் விறுவிறுப்பு
x
தினத்தந்தி 14 Dec 2019 9:31 AM GMT (Updated: 14 Dec 2019 9:31 AM GMT)

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மறுநாள் நிறைவடையும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மனுத்தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.

சென்னை,

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கட்கிழமையுடன் (16- ம் தேதி) நிறைவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மனுத்தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தொகையை ஊர் முக்கியஸ்தர்களிடம் செலுத்த வேண்டும் என ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற ஊர்மக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணத்தை அடுத்த கொரனாட்டுக்கருப்பூர், கொற்கை, கடிச்சம்பாடி, உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி பதவிகளுக்கு சுயேட்சைகள் ஏராளமானோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உழவு மாடுடன் வந்து வேட்பாளர் ஒருவர் மனுத் தாக்கல் செய்தார். வெள்ளானூர் ஊராட்சியில் 4-வது வார்டுக்கு போட்டியிடும் மளிகை கடை வியாபாரி சின்னசாமி ஊராட்சி அலுவலகத்திற்கு காளைமாட்டுடன் வந்து மனுவை அளித்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுக்களை அளித்தனர். முசிறி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் யூனியன் அலுவலகத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு மனு தாக்கல் செய்ய பெண்கள் ஆர்வமுடன் திரண்டனர். ஆவுடையார்கோயில் மணமேல்குடி பகுதியில் உள்ளாட்சிதேர்தலுக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற திங்கட்கிழமையுடன் முடிவடைவதால் அரசியல் கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தீவிரம் காட்டினர். எனவே, உள்ளாட்சி தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

Next Story