'கோயபல்ஸ்' த‌த்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறார் ஸ்டாலின்; அமைச்சர் வேலுமணி பதிலடி


கோயபல்ஸ் த‌த்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறார் ஸ்டாலின்; அமைச்சர் வேலுமணி பதிலடி
x
தினத்தந்தி 14 Dec 2019 12:28 PM GMT (Updated: 14 Dec 2019 12:28 PM GMT)

ஒரு பொய்யை நூறு முறை சொன்னால் பொய் உண்மையாகும் என்ற 'கோயபல்ஸ்' த‌த்துவத்தின் அடிப்படையில் ஸ்டாலின் செயல்படுகிறார் என அமைச்சர் வேலுமணி பதிலடியாக பேசியுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகராட்சியில் ஆற்று மணலுக்கு பதில் எம்-சாண்ட் (M-sand) பயன்படுத்தப்படுகிறது.  இதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.  இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில், ஆற்று மணலுக்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தியதில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியால் விடப்படும் ஒப்பந்தங்களில் ஆற்று மணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதில் எம்-சாண்ட் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆற்று மணலை விட எம்-சாண்ட் விலை குறைவு என்ற நிலையில், ஒப்பந்தங்களில் கான்கிரீட் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ரெடிமிக்ஸ் எம்-30 வகை மணலின் சந்தை விலை 30 சதவீதம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள ஊழலை, ஊழல் தடுப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் வேலுமணி, சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் முறையாக ஆன்லைன் மூலம் கோரப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் முயற்சியில் தோல்வியடைந்த ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக அ.தி.மு.க. அரசை குற்றம் சாட்டி வருகிறார்.

அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் எந்த அளவுக்கு தன்னை தரம் தாழ்த்திக்கொள்கிறார் என்பதை இதன் மூலம் மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு பொய்யை நூறு தடவை சொன்னால் பொய் உண்மையாகும் என்ற 'கோயபல்ஸ்' த‌த்துவத்தின் அடிப்படையில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கூறியுள்ளார்.

Next Story