பாலியல் குற்றங்களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


பாலியல் குற்றங்களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Dec 2019 9:10 PM GMT (Updated: 14 Dec 2019 9:10 PM GMT)

ஆந்திராவை போன்று பாலியல் குற்றங்களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலியல் குற்றங்கள்

ஆந்திராவில் பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 21 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவும், பாலியல் குற்றங்களைச் செய்தவர்களுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் சட்ட முன்வரைவு ஆந்திர மாநில சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான புரட்சிகரமான நடவடிக்கை இது என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும், வன்கொடுமைகளுக்கும் நியாயமான காலத்தில் நீதி கிடைப்பதில்லை என்ற கொந்தளிப்பு மக்களிடம் நிலவுகிறது. பாலியல் வன்கொடுமைகளை திட்டமிட்டு நிகழ்த்துவோர் தண்டிக்கப்படாததால், மீண்டும், மீண்டும் இத்தகைய குற்றங்களைச் செய்கின்றனர்.

சிறப்பு சட்டம்

கடந்த இரு நாட்களுக்கு முன்பு கூட கடலூரில் திரைப்படத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை, அவரது கணவனை தாக்கிவிட்டு கடத்திச் சென்ற 4 மனித மிருகங்கள், கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்படாவிட்டால், அடுத்த சில வாரங்களில் பிணையில் வந்து இதேபோல் மேலும் பல பெண்களை சீரழிப்பார்கள். எனவே, பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நியாயமான அவகாசத்தில் விசாரித்து முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

எனவே, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக ஆந்திரத்தில் நிறைவேற்றப்பட்டது போன்ற அம்சங்களைக் கொண்ட சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் கடலூரில் கர்ப்பிணியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 பேருக்கு கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story