வேலை பார்த்த கம்பெனி மூடல்; விசா காலமும் முடிந்தது சவுதி அரேபியாவில் உணவின்றி தவித்து வரும் தமிழர்கள் தூதரக நடவடிக்கைக்காக ஏங்குகிறார்கள்


வேலை பார்த்த கம்பெனி மூடல்; விசா காலமும் முடிந்தது சவுதி அரேபியாவில் உணவின்றி தவித்து வரும் தமிழர்கள் தூதரக நடவடிக்கைக்காக ஏங்குகிறார்கள்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:35 PM GMT (Updated: 14 Dec 2019 10:35 PM GMT)

வேலை பார்த்த கம்பெனி மூடப்பட்டதாலும், விசா காலம் முடிவுற்றதாலும் சவூதி அரேபியாவில் என்ன செய்வதென்றே தெரியாமல் தமிழர்கள் தவித்து வருகிறார்கள். இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கைக்காக அவர்கள் ஏங்கி காத்திருக்கிறார்கள்.

சென்னை,

உள்நாட்டில் வேலையின்றி அங்கீகாரமற்ற ஏஜெண்டுகளிடம் பணத்தை கொடுத்து பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்கள், ஒருகட்டத்தில் அங்கு வேலையின்றி தவித்து வருவதும், நாடு திரும்ப பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்தியாவுக்குத் திரும்பி வர பயணச்செலவுக்கு கூட பணம் இல்லாமல் நிர்க்கதியாக தவித்துக் கொண்டிருக்கும் நிலைமையும் தொடர் கதையாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது சவுதி அரேபியாவில் ஏராளமான தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாகவும், அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளின் நடவடிக்கைக்காக ஏங்கி காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தவிக்கும் தமிழர்கள்

மதுரை, திண்டுக்கல், சிவகங்கையை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சில ஏஜெண்டுகள் மூலம் சவுதி அரேபியா சென்றனர். அந்நாட்டில் தம்மாம் நகரில் உள்ள ஒரு கட்டுமான கம்பெனியில் ‘ஸ்டீல் பிக்ஸர்’களாக பணியாற்றினர். இந்தநிலையில் அந்த கம்பெனி திடீரென மூடப்பட்டதால், அங்கு வேலைக்கு சென்ற தமிழர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கேட்டதற்கு அந்த கம்பெனி நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை. ஏஜெண்டுகளும் மழுப்பலான பதில் கூறி வருவதால் அடுத்து என்ன செய்வது? என்றே தெரியாமல் அவர்கள் இருக்கிறார்கள். கம்பெனி மூடப்பட்டாலும் வேறு வழியின்றி கம்பெனி வளாகத்திலேயே தங்கி இருக்கிறார்கள்.

கம்பெனி இழுத்து மூடல்

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் (வயது 30), ஜான்பால் (34) ஆகியோர் தொலைபேசி வழியாக ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

நாங்கள் வேலை பார்த்த கம்பெனியை கடந்த பிப்ரவரி மாதம் இழுத்து மூடிவிட்டார்கள். என்னவென்று கேட்டும் பதில் அளிக்கவில்லை. ‘திடீரென்று வேலையில்லை என்று சொன்னால் நாங்கள் என்ன செய்வது? எங்கே போவது? வருமானத்துக்கு என்ன வழி இருக்கிறது?’ என்று கேட்டால், ‘உங்கள் நாட்டு தூதரகத்துக்கு சென்று கேளுங்கள்’ என்று மட்டும் கூறுகிறார்கள்.

‘விசா’ காலம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. சாப்பாட்டுக்கும் வழியில்லை. இதனால் அருகே வீட்டு வேலைகள், கட்டுமான வேலைகளுக்கு தினக்கூலி அடிப்படையில் சென்று, அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து சாப்பிட்டு வாழ்க்கை நடத்தி வருகிறோம்.

குடும்பத்தினர் கண்ணீர்

கம்பெனி சார்பில் வழங்கப்பட்ட ஒப்பந்த கால சான்றிதழும், தூதரகம் வழங்கிய தற்காலிக வாழ்வாதார சான்றிதழும் தான் இத்தனை காலம் இந்த நாட்டில் எங்களை இருக்க வைத்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் நாங்கள் எப்போதோ கைது செய்யப்பட்டு சிறையில் இருப்போம்.

எங்கள் நிலை குறித்து மனைவி, குழந்தைகள் என குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறார்கள்.

தூதரகத்தில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்திய அரசு தான் எங்களை காப்பாற்றி, மீண்டும் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து, மீண்டும் எங்களை நாட்டுக்கு கொண்டு வந்து சேர்ந்திட வேண்டும். எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்...

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story