ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் குலுக்கல் முறையில் தேர்வு


ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் குலுக்கல் முறையில் தேர்வு
x
தினத்தந்தி 14 Dec 2019 11:09 PM GMT (Updated: 14 Dec 2019 11:09 PM GMT)

ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து பேரம் நடந்ததா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஓமலூர்,

தமிழகம் முழுவதும் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) முடிவடைகிறது. இதில் சேலம் மாவட்டம், ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள 3 மாவட்ட கவுன்சிலர் பதவி, 27 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி, 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி, 33 ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் சிக்கனம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர்களான அ.தி.மு.க.வை சேர்ந்த வெள்ளையன், கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்த ரங்கநாதன் ஆகியோர் போட்டியிடுவதாக கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

குலுக்கல் முறையில் தேர்வு

இந்தநிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு இருவரும் கலந்து பேசி நரிபள்ளம் காளியம்மன் கோவில் சாமி முன்பு சீட்டு குலுக்கி போட்டு யார் பெயர் வருகிறதோ? அவர் நின்று கொள்வதாகவும், மற்றொருவர் விட்டுகொடுப்பது என்றும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து தங்கள் ஆதரவாளர்களுடன் கோவிலில் சீட்டு குலுக்கி போட்டு முடிவு செய்து கொள்ள அவர்கள் சென்று உள்ளனர்.

அப்போது குலுக்கல் சீட்டில் வெள்ளையன் பெயர் வந்ததாக தெரிகிறது. இதனால் ரங்கநாதன் போட்டியில் இருந்து விலகி கொண்டு உள்ளார். இந்தநிலையில் ரங்கநாதன் பணத்தை பெற்று கொண்டு போட்டியில் இருந்து விலகி கொண்டதாக பொதுமக்களிடம் பேச்சு வந்ததாக தெரிகிறது.

பேரம் நடந்ததா?

அதேபோல் நேற்று வரை சிக்கனம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு வெள்ளையனை தவிர வேறு யாரும் வேட்பு மனு அளிக்கவில்லை. சிக்கனம்பட்டியில் குலுக்கல் முறையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. மேலும் தலைவர் பதவிக்கு நேற்று வரை வெள்ளையனை தவிர வேறுயாரும் மனு தாக்கல் செய்யாததால் பேரம் நடந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைவர் பதவி ஏலம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் கபிலக்குறிச்சி ஊராட்சியில் 2,300 வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் தலைவர் பதவியை ரூ.35 லட்சத்திற்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளதாகவும், இதேபோல் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய சோளிபாளையம் ஊராட்சியை அப்பகுதியை சேர்ந்த சேர்ந்த நபர் ஒருவர் ரூ.20 லட்சத்து 50 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகனிடம் கேட்டபோது, “தலைவர் பதவிகள் ஏலம் விடப்பட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால் சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் முறையாக நடைபெறும்” என கூறினார்.

தேனியில்...

தேனி அருகே உள்ளது, ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. தற்போது இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்பாளர்களை குலுக்கல் முறையில் நேற்று முன்தினம் கிராம மக்கள் ஒன்றுகூடி தேர்வு செய்தனர்.

இதற்கிடையே குலுக்கல் முறையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். அதன்பேரில், தேர்தல் அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Next Story