மதுரையில் கருணாநிதி சிலை அமைக்க அனுமதி கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


மதுரையில் கருணாநிதி சிலை அமைக்க அனுமதி கேட்டு வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 14 Dec 2019 11:20 PM GMT (Updated: 14 Dec 2019 11:20 PM GMT)

மதுரையில் கருணாநிதி சிலை அமைக்க அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

மதுரை,

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கோ.தளபதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ் மொழிக்காகவும், தமிழினத்துக்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி.

அவருக்கு மதுரையில் தி.மு.க. சார்பில் சிலை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக மதுரை அழகர்கோவில் சாலையில் தமுக்கம் மைதானம் அருகிலோ, ரேஸ்கோர்ஸ் சாலை சந்திப்பிலோ, கே.கே.நகர்-அண்ணாநகர் சந்திப்பு பகுதியிலோ சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மதுரை கலெக்டரிடம் கடந்த 11.9.2018 அன்று மனு அனுப்பினேன். அதைதொடர்ந்து நேரிலும் கலெக்டரை சந்தித்து அனுமதி கோரினோம்.

இந்த மாதம் 6-ந்தேதியும் மனு அளித்தோம். ஆனால் எங்கள் மனு மீது எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் ஆளுங்கட்சி சார்பில் ஜெயலலிதாவுக்கு மதுரை கே.கே.நகர் நுழைவுவாயில் அருகில் புதிதாக சிலை வைத்துள்ளனர். அவர்களுக்கு மட்டும் சிலை வைக்க அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

அனுமதி வழங்க வேண்டும்

கடந்த 15 மாதங்களுக்கு முன்பே கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கேட்ட எங்கள் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே எங்கள் மனுவை பரிசீலித்து, மேற்கண்ட இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் கருணாநிதி சிலை அமைக்க அனுமதி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story