அரசு கட்டுமானத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததா? ‘நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார்’ மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்


அரசு கட்டுமானத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததா? ‘நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார்’ மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்
x
தினத்தந்தி 14 Dec 2019 11:27 PM GMT (Updated: 14 Dec 2019 11:27 PM GMT)

அரசு கட்டுமானத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக கூறிய குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத்தயார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.

சென்னை,

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விலைப்புள்ளிகள்

சென்னை மாநகராட்சியின் கட்டுமானப்பணிகளில் ‘எம்.சாண்ட்’ மணலை பயன்படுத்திவிட்டு, ஆற்று மணலை பயன்படுத்தியது போல விலைப்புள்ளியை வழங்கியதாகவும், அதில் ரூ.1,000 கோடிக்கு ஊழல் நடந்திருக்கிறது என்றும் தி.மு.க. தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நஞ்சை கக்கி இருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் உண்மை ஒரு துளி அளவும் இல்லை. சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி முறையாக ஆன்லைன் மூலம் கோரப்பட்டு, விதிகளுக்கு உட்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் முடிவு செய்யப்படுகின்றன.

அவ்வாறு, நடைபெற்ற ரூ.1,164.85 கோடி பணிகளில் ரூ.32.67 கோடி அளவிலான கான்கிரீட் பணிக்கு மட்டுமே ‘எம்.சாண்ட்’ அல்லது ஆற்றுமணல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஏதோ ரூ.1,000 கோடி முறைகேடு நடந்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது கடைந்தெடுத்த பொய். ஆற்றுமணலை விட, ‘எம்.சாண்ட்’ விலை நூற்றுக்கு 50 சதவீதம் குறைவு என்று அடிப்படை அறிவு இல்லாமல் அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.

ஐகோர்ட்டு உத்தரவு

2017-ம் ஆண்டு நவம்பரில், மாநிலம் முழுவதும் உள்ள ஆற்று மணல் குவாரிகளை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆற்று மணல் குவாரிகள் மூடப்படும் சூழ்நிலையில், ஆற்று மணலுக்கு பதிலாக அதைப்போன்ற தரம் கொண்ட ‘எம்.சாண்ட்’ மணலை பயன்படுத்தி கட்டுமானப்பணிகளை தொடர அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் திட்டப்பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களின் விலைப்பட்டியலை பொதுப்பணித்துறை வெளியிடும். அதன்படி, 2018-19-ம் ஆண்டில் ‘எம்.சாண்ட்’ ரூ.1,250 ஆகவும், ஆற்று மணலின் விலை ரூ.447 ஆகவும் இருந்தது. எல்லா காலகட்டங்களிலுமே எம்.சாண்டின் விலை ஆற்று மணலைவிட மிக அதிகமாகவே உள்ளது.

தி.மு.க. ஆட்சியில்...

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு அலுவலக விலைப்பட்டியலை விட கூடுதலாக 10 முதல் 30 சதவீதம் வரை தற்போது வழங்குவதாக புகார் கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இது ஒப்பந்த நடைமுறைகளிலும், அதனை செயல்படுத்தும் வழிமுறைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று தான். ஒப்பந்தப்பணிக்கு தேவையான பொருட்களின் விலை உயர்வு, காலதாமதம் போன்ற காரணங்களால் விலை உயர்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று தான்.

தி.மு.க. ஆட்சி காலத்திலும் 2008-ம் ஆண்டில் நடைபெற்ற கட்டிடம், தகன மேடை, சாலை, பூங்கா மற்றும் பாலப்பணிகளுக்கு 35 முதல் 73 சதவீதம் வரை கூடுதலாக வழங்கப்பட்டது. இதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணமா?

ஊழல் நடக்கவில்லை

அரசின் விலைப்பட்டியலின்படி, ஆற்று மணலை கொண்டு செய்யப்படும் பணியின் செலவு குறைவு, எம்.சாண்ட் மூலம் செய்யும் பணியின் செலவு அதிகம். வெளிச்சந்தை விலையும், பொதுப்பணித்துறை விலையும் ஒன்றாகவே உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு எந்தவிதமான நிதி இழப்பும் ஏற்படவில்லை என்பது தெளிவு.

இந்த பணிகளுக்காக நிதி வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு தரத்தை உறுதி செய்துள்ளது. செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அவசர குடுக்கையாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை விஜிலென்ஸ் அறிக்கை ஏன் போடவில்லை என்று கேட்பது சிறுபிள்ளைத்தனம். ஊழல் நடக்கவில்லையே.

உள்ளாட்சித்துறை அமைச்சராக நான் பதவி வகிக்கும் காலத்தில் இந்திய அளவில் 86 விருதுகள் பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது. 19-ந் தேதியன்று டெல்லியில், தமிழகத்திற்கு 8 விருதுகள் வழங்கப்படவுள்ளன. திட்டப் பணிகள், நீர் மேலாண்மை சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கையை செயல்படுத்துவதில் முதல் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு தமிழகத்திற்கு விருது வழங்கப்பட உள்ளது.

விலகத்தயார்

இதைப்புரிந்து கொண்டு மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது அவருக்கும், அவரது கட்சிக்கும் நல்லது. பொதுக்கூட்ட மேடைகளில் தவறாமல் சொல்லுகிற, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதுபோல குற்றச்சாட்டுகளை கூறாமல், தக்க ஆதாரத்துடன் பேச வேண்டும். அப்படி ஆதாரம் இருந்தால் இன்றே என் பதவியை முழுமனதுடன் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

ஆதாரம் இல்லாவிட்டால், குற்றச்சாட்டை நிரூபிக்க மு.க.ஸ்டாலினால் முடியாவிட்டால், அவர் தி.மு.க. தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவிகளை இன்றே துறந்துவிட்டு அரசியலை விட்டே ஒதுங்கி போக வேண்டும்.

குற்றச்சாட்டை நிரூபித்தால், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், கோவை புறநகர் மாவட்டச்செயலாளர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகிய பதவிகளை துறந்து அரசியலை விட்டே விலக நான் தயார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story