2 கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு அரசியல் கட்சியினர் போட்டா போட்டி


2 கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு அரசியல் கட்சியினர் போட்டா போட்டி
x
தினத்தந்தி 14 Dec 2019 11:37 PM GMT (Updated: 14 Dec 2019 11:37 PM GMT)

தமிழகத்தில் 2 கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களை தவிர்த்து வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது.

வேட்பு மனு தாக்கல்

இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் 3 ஆயிரத்து 217 பேரும், 2-வது நாள் 1,784 பேரும், 3-வது நாள் 16 ஆயிரத்து 654 பேரும், 4-வது நாள் 16 ஆயிரத்து 360 பேரும், 5-வது நாளான நேற்று முன்தினம் அதிகபட்சமாக 71 ஆயிரத்து 763 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்தவகையில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 778 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்தநிலையில் அரசியல் கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் பகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போன்றவற்றை அறிவித்து உள்ளதால், நேற்றும் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்தது. நாளை (திங்கட்கிழமை) வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

வாக்குப்பதிவு

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுவை திரும்பப்பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ந்தேதியும் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6-ந்தேதி பதவி ஏற்கின்றனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் மறைமுக தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஜனவரி 11-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

Next Story