ஆத்தூர் அருகே அழகு நிலைய பெண் ஊழியர் மர்மச்சாவு: கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


ஆத்தூர் அருகே அழகு நிலைய பெண் ஊழியர் மர்மச்சாவு:  கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Dec 2019 8:08 PM GMT (Updated: 15 Dec 2019 8:08 PM GMT)

ஆத்தூர் அருகே அழகு நிலைய பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வலசு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி, லாரி டிரைவர். இவருடைய மனைவி சசிரேகா. இவர்களுடைய மகள் கவுசிகா (வயது 23). இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கவுசிகா தனது கணவர் மற்றும் 1¼ வயது பெண் குழந்தையுடன் திருப்பூரில் வசித்து வந்தார். கவுசிகா அங்குள்ள அழகு நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வீட்டுக்கு கடந்த 13-ந் தேதி அவர் வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கவுசிகா வீட்டின் முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மர்மச்சாவு என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கவுசிகாவின் உடலில் விஷம் மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இல்லை என ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து விசாரணைக்கு உதவிடும் வகையில், சிறப்பு உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வந்தால் தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் கவுசிகா ஏதேனும் நோய் கொடுமையால் இறந்தாரா? அல்லது கற்பழிக்க முயன்று மர்ம நபரால் கொல்லப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கவுசிகா இறப்பதற்கு முன்பு அவரது செல்போனுக்கு பல்வேறு அழைப்புகள் வந்துள்ளன. மேலும் அதில் வீடியோ கால் போனும் வந்துள்ளது. அவர் இறந்து கிடந்த சில மணி நேரத்தில் அப்பகுதியில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்று பின்னர் வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

எனவே அந்த மர்ம நபர் யார்? அவருக்கும், கவுசிகா மரணத்துக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story