குடியுரிமை திருத்த சட்டம் ; ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை


குடியுரிமை திருத்த சட்டம் ; ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை
x
தினத்தந்தி 18 Dec 2019 6:19 AM GMT (Updated: 18 Dec 2019 6:19 AM GMT)

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

சென்னை,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை திருத்த சட்டம்  வகை செய்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழக மாணவ மாணவியர்களும் மற்றும் உத்தரபிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இதேபோன்று டெல்லி சீலாம்பூர், ஜாபராபாத்திலும் போராட்டம் நடந்தது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தது. அதன்படி, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்ட  தலைநகரங்களில் போராட்டம் நடத்தியது. காஞ்சீபுரத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள தி.மு.க. தலைமையகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.

தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் எம்.பி.யான டி.ஆர்.பாலு, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடந்து வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Next Story