அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுப்பு இல்லை; போக்குவரத்து கழகம்


அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுப்பு இல்லை; போக்குவரத்து கழகம்
x
தினத்தந்தி 22 Dec 2019 3:20 AM GMT (Updated: 22 Dec 2019 3:20 AM GMT)

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன.  அசாம், திரிபுரா மற்றும் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் டெல்லிக்கும் பரவியது. டெல்லி சீலாம்பூர், ஜாப்ராபாத் பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.  இந்த நிலையில் போராட்டங்கள் குறைந்து வட மாநிலங்களில் அமைதி திரும்பி வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தின.

தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சமீபத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.  இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னையில் நாளை பேரணி நடத்த முடிவானது.

இந்நிலையில், போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை செய்தியில், போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை வழங்கப்பட்ட விடுப்பு ரத்து செய்யப்படுகிறது.  அதனால் அவர்கள் வழக்கம்போல் நாளை கட்டாயம் பணிக்கு வரவேண்டும்.  யாருக்கும் விடுப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை நடைபெறும் பேரணியில் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ள கூடிய சூழ்நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை பணிக்கு கட்டாயம் வர வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Next Story