தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் - சிவனடியார்கள் கோரிக்கை


தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் - சிவனடியார்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2019 10:45 PM GMT (Updated: 22 Dec 2019 9:02 PM GMT)

தஞ்சை பெரியகோவிலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை வைத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவரும், பதினெண் சித்தர் மட தலைவருமான பொன்னுசாமி சித்தர் மூங்கில் அடிகளார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்று வந்தனர். அவர்கள் பெரியகோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணிகளையும் பார்வையிட்டனர்.

பின்னர் பொன்னுசாமி சித்தர் மூங்கில் அடிகளார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை பெரியகோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தபோது தீ விபத்து ஏற்பட்டு 48 பேர் இறந்தனர். அதன்பிறகு 2 நாட்களில் எந்தவித முறையான பரிகாரமும் செய்யாமல் அவசரகோலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. எனவே பரிகாரம் பூஜைகள் செய்யப்பட வேண்டும்.

கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும். கோவிலில் சித்தர் நெறிப்படி தமிழில் பூஜைகள் செய்ய வேண்டும். கோவில் கருவறைகளில் பூஜை செய்பவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும்.

யாகபூஜைகள் அனைத்தும் கோவில் வளாகத்துக்குள் தமிழ்மொழியில் நடைபெற வேண்டும். இதை வலியுறுத்தி முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர், தலைமை செயலாளர், கலெக்டர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story