தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு


தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
x
தினத்தந்தி 23 Dec 2019 10:31 AM GMT (Updated: 23 Dec 2019 11:32 AM GMT)

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

சென்னை,

புதிய வரைவு வாக்காளர்கள் பட்டியல்படி, சென்னை மாவட்டத்தில் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளதாகவும், 32 ஆயிரத்து 362 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக, வேளச்சேரி தொகுதியில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 909 வாக்காளர்கள் உள்ளனர் என்றும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில், ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர் என்று ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். 

மதுரை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டி.ஜி.வினய் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி மதுரையில் ஆண் வாக்காளர்கள் 12,76,784; பெண் வாக்காளர்கள் 13,12,040, மூன்றாம் பாலினம் 157 என மொத்தம் 25,88,981 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க படிவம் 6, பெயர்களை நீக்கம் செய்திட படிவம் 7 , பட்டியலில் உள்ள விவரங்களில் திருத்தம் செய்திட படிவம் 8, அதே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A பூர்த்தி செய்து அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

23.12.2019 முதல் 22.01.2020 வரை வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்களிலும் அலுவலக வேலை நாட்களில் மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து அளித்திடலாம்.

4.1.2020, 5.1.2020, 11.1.2020 மற்றும் 12.1.2020 ஆகிய 4 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் உரிய படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து அளித்திடலாம்.

பெறப்படும் படிவங்கள் மீது உரிய விசாரணைகள் மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 14.02.2020 அன்று வெளியிடப்படும்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர்  பட்டியலை ஆட்சியர் பிரவீன் நாயர் வெளியிட்டார். நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் 12 லட்சத்து 78 ஆயிரத்து 227 வாக்காளர்கள்  உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில்  29 லட்சத்து 7 ஆயிரத்து 849 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 13 ஆயிரத்து 252 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஆத்தூர், திண்டுக்கல், நத்தம் ஆகிய  7 சட்டமன்ற தொகுதிகளில், 17 லட்சத்து 95 ஆயிரத்து 174 வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டார்.  தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள, 9 தொகுதிகளில் மொத்தம், 22 லட்சத்து 47 ஆயிரத்து 855 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலின்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில்  31 லட்சத்து 27 ஆயிரத்து 986 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள ஒரு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், மொத்தம் 29 லட்சத்து 23 ஆயிரத்து 837 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக ஆன்லைன் மூலமாகவும் மனுக்களை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதிதாக 7 ஆயிரத்து 16 பேர் சேர்ந்துள்ள நிலையில்,  மொத்த வாக்காளர்கள்  எண்ணிக்கை 13 லட்சத்து 97 ஆயிரத்து 730 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் 2019 உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வெளியிட்டார். அதன்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்து 696 ஆக உள்ளது.

Next Story