உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் சிலிப் வினியோகிக்க இன்று கடைசி நாள் - மாநில தேர்தல் கமிஷனர் அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் சிலிப் வினியோகிக்க இன்று கடைசி நாள் - மாநில தேர்தல் கமிஷனர் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2019 11:45 PM GMT (Updated: 2019-12-24T03:33:44+05:30)

‘உள்ளாட்சி தேர்தலுக்கான பூத் சிலிப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வினியோகம் செய்து முடித்திருக்க வேண்டும்’ என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷனர் அலுவலகத்தில் மாநில தேர்தல் கமிஷனர் இரா.பழனிசாமி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து 27 மாவட்ட தேர்தல் அலுவலர்கள், கலெக்டர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆய்வு செய்தார். ஆணைய செயலாளர் இல.சுப்பிரமணியன், காவல் துறைத்தலைவர் (தேர்தல்) ச.ந.சேஷசாய் மற்றும் எஸ்.பி. (தேர்தல்) ப.கண்ணம்மாள் மற்றும் மாநில தேர்தல் ஆணைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவது குறித்து விவாதித்து கமிஷனர் அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக கட்சி சார்ந்த தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சடித்தல் மற்றும் கட்சி சாரா தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை பிரித்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட வேண்டும்.

முதல் கட்ட தேர்தல் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வரும் 26-ந்தேதி வழங்க வேண்டும். வாக்குப்பதிவு பொருட்களின் தயார் நிலை மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு பகிர்ந்தளித்தல், மண்டல அலுவலர்களை நியமித்தல், மண்டல குழுக்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் மண்டல வரைபடம் தயாரிக்க வேண்டும்.

தேர்தல் நன்னடத்தை விதிகளை செயல்படுத்தும் வகையில், வாக்குச்சாவடிகளில் இணைய வழி கண்காணிப்பை அமைத்தல், வீடியோ ஒளிப்பதிவு செய்தல், தேர்தல் நுண்பார்வையளர்களை நியமித்தல், பறக்கும் படைகள் அமைத்தல், மாவட்ட மற்றும் மாநில அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க வேண்டும்.

மாவட்ட அளவிலான பாதுகாப்புத் திட்டம் இறுதி செய்வதுடன், தற்போது வெளியிடப்பட்டுள்ள சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலின்படி துணை வாக்காளர் பட்டியல் தயார் செய்தல் மற்றும் அச்சடிக்க வேண்டும். பதற்றமான மற்றும் பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளை கண்டறிவதுடன், உரிய பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக காவல்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

அனைத்து விவரங்களையும் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வாக்குசாவடிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பூத் சிலிப் பதிவிறக்கம் செய்து அச்சடித்து இன்று (செவ்வாய்க்கிழமை) வினியோகம் செய்து முடித்திருக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நுண்பார்வையாளர்களை நியமித்து பயிற்சி அளிக்க வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பிற தேர்தல் அலுவலர்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகளை வழங்க வேண்டும். வேட்பாளர் செலவினம் தொடர்பான விலைப்பட்டியல் நிர்ணயித்தல், வாக்கு எண்ணும் மையங்களில் இணைய வழி கண்காணிப்பை அமைத்தல், வீடியோ ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். மாவட்ட தலைமை அலுவலகங்களில் புகார் பிரிவு அமைத்தல், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, தேர்தல் தொடர்பான செலவினங்களுக்கு நிதி வழங்குதல், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும்.

தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

Next Story