பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை பெற மறுப்பு தெரிவித்தது ஏன்? மாணவி ரபீகா அப்துரகீம் விளக்கம்


பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை பெற மறுப்பு தெரிவித்தது ஏன்? மாணவி ரபீகா அப்துரகீம் விளக்கம்
x
தினத்தந்தி 24 Dec 2019 5:41 AM GMT (Updated: 24 Dec 2019 5:49 AM GMT)

ஜனாதிபதி கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கத்தை பெற மறுப்பு தெரிவித்தது ஏன்? என்பது குறித்து மாணவி ரபீகா அப்துரகீம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி வரும் மாணவ, மாணவிகள் புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவினை புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தனர். இந்த விழாவுக்கு, மாஸ் கம்யூனிகேசன் முதுகலை பட்டப் படிப்பில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்ற கேரளாவை சேர்ந்த மாணவி ரபீகா அப்துரகீம் என்பவரும் வந்திருந்தார்.

அவரிடம் பேசி,  விழா நடந்த அரங்கத்தை விட்டு போலீசார் வெளியே அழைத்து வந்தனர். விழா முடியும்வரை மாணவி ரபீகா அப்துரகீமை அரங்கத்திற்குள் அனுமதிக்கவில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரங்கை விட்டு வெளியே சென்ற பின்னர்தான் அரங்கத்திற்குள் அனுமதித்தனர்.

விழாவில் கல்வித்துறை செயலாளர் அன்பரசு, பல்கலைக்கழக இயக்குனர் ராஜீவ் ஜெயின் ஆகியோர் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார்கள். அவர்களிடம் இருந்து தங்கப்பதக்கத்தை பெற ரபீகா அப்துரகீம் மறுத்துவிட்டார். சான்றிதழை மட்டும் பெற்றுக் கொண்டார். ஜனாதிபதி கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் மாணவி வெளியேற்றப்பட்டதும், இதை அவமரியாதையாக கருதி தங்கப்பதக்கத்தை பெற மாணவி மறுத்ததும் புதுவை பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக  ரபீகா அப்துரகீம் தனது பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது;-

எனது தங்கப் பதக்கத்தையும், முதுநிலை சான்றிதழையும் பெறும் தருணத்தைப் பற்றி நான் அடிக்கடி கனவு கண்டு வந்தேன். இந்தியா முழுவதும் ஒரு வலுவான அமைதியான செய்தியை அனுப்பக்கூடிய வகையில் இது முடிவடையும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.

ஒரு பெண்ணாக, ஒரு மாணவராக, ஒரு இந்தியராக, இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம்  மற்றும் தேசிய குடியுரிமை பதிவுக்கு எதிராக போராடும் அனைத்து மாணவர்கள் மற்றும் இந்தியாவின் பொதுமக்களுக்கு ஆதரவாக எனக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை நிராகரித்தேன்.

கல்வி என்பது இளைஞர்களுக்கு என்ன அர்த்தம் என்பதை உலகுக்குக் காண்பிக்கும் வழி இது. கல்வி என்பது பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் அல்ல. ஒற்றுமை, அமைதி மற்றும் அநீதி, பாசிசம் மற்றும் மதவெறிக்கு எதிராக எழுந்து நிற்பது போன்ற செய்திகளைக் கற்றுக்கொள்வது ஆகும்.

அறியப்படாத காரணங்களுக்காக நான் ஆடிட்டோரியத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டிருந்தாலும், ஜனாதிபதி வந்தபோது 100 மாணவர்கள் தங்கள் பதக்கங்களுக்காக காத்திருந்தனர். அவர் வெளியேறும்போது மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டோம்.  ஒரு படித்த இளைஞராக என்னால் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடிந்தது என்பதற்காக நான் நிம்மதியாக உணர்கிறேன்.

போலீசார் எனது ஹிஜாப்பை அகற்றும்படி கேட்டதாக கூறும் செய்திகளை நான் பார்த்து வருகிறேன். அது தவறானது. யாரும் என்னை எதையும் அகற்றச் சொல்லவில்லை. அது தவறானது. என்னை ஏன் வெளியே இருக்க சொன்னார்கள் என்று யாரும் என்னிடம் கூறவில்லை என கூறி உள்ளார்.

Next Story