கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 24 Dec 2019 10:30 PM GMT (Updated: 24 Dec 2019 9:03 PM GMT)

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:- உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் உணர்வுடனும் உற்சாகப்பெருக்குடனும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருவிழா கருணைமிக்க தியாக வாழ்வைக் கொண்ட இயேசுநாதரின் பிறப்பினைக் குறிப்பதாகும். பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தாமல், பிறர் தவறுகளையும் தன் மீது சுமந்துகொண்ட பெருமகனாக இயேசுநாதரின் வாழ்க்கை அமைந்திருந்ததை வரலாற்றில் காண்கிறோம்.

அன்பும், அமைதியும் மிக்க வாழ்க்கை அனைவருக்கும் வாய்த்திட வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் திருவிழாவின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேறிட, தி.மு.க. என்றும் கிறிஸ்தவ சமுதாய மக்களுக்குத் துணை நிற்கும் என்ற உறுதியுடன் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
உலகெங்கிலும் போராட்டங்களும், துன்பங்களும் நிறைந்த மனித வாழ்வில், இதயக் காயங்களுக்கு மருந்தாகவும், வாழ்வின் அறைகூவல்களை எதிர்கொள்ளும் நம்பிக்கையாகவும், மனித குலத்துக்கே நீதிமொழிகளையும், உபதேசங்களையும் தந்த ரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை, கிறிஸ்துமஸ் பண்டிகைத் திருநாளாக, தரணியெங்கும் கிறிஸ்தவ பெருமக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அன்பையும், கனிவையும் பரிமாறும் நேசர்களாகிய கிறிஸ்தவ பெருமக்களுக்கு மனமகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
வாழ்க்கைப் பாடங்கள் அனைத்தையும் உலகிற்கு போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இயேசு பிரானின் போதனைகளுக்கு நிகழ்கால உதாரணமாக வாழ்வது தான் அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும்.

நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும். போட்டி பொறாமைகள் அகல வேண்டும். ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம் ஆகும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-
அனைத்து மதத்தினரோடும், மக்களோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்து வருகிற கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற பண்டிகையாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது. ஏழை-எளிய மக்கள் மீது அன்பு காட்டுகிற மதமாக கிறிஸ்தவ மதம் இருந்து வருகிறது.

அனைவரின் வாழ்விலும், வளமும், நலமும் பெருகிட கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-
சாதி, மதங்களின் பெயரால் மனிதர்களுக்குள் வெறுப்பை வளர்க்கக்கூடாது. பகைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும், அன்பும், அறமும் தான் மனிதநேயத்திற்கு அடிப்படையாகும், இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என மக்களுக்கு போதித்தவர் இயேசு பிரான் ஆவார்.

கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒற்றுமையோடும், அமைதியோடும், நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை உற்றார்-உறவினர்களோடும், நண்பர்களோடும் கொண்டாட வேண்டும் என எனது இதயமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
கிறிஸ்தவ சமுதாய மக்கள் வாழ்வில் நல்லது நீடித்து தீயவை ஒழிந்து அவர்கள் நல்வாழ்வு வாழ இயேசு கிறிஸ்து என்றும் துணை நிற்பார் என்று தெரிவித்துக்கொண்டு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-
கருணையின் வடிவமான இயேசுபிரானின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ பெருமக்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பையும், பொறுமையையும் மனித சமுதாயத்திற்கு போதித்த இயேசு பெருமான் வழியில் அனைவரையும் அன்போடு நடத்தி, மகிழ்ச்சியோடு வாழ்ந்திட கிறிஸ்துமஸ் திருநாள் வழிவகுக்கட்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இம்மண்ணுலகில் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காக அறவழியில் போராடிய மகத்தான போராளி இயேசு பெருமானின் பிறந்தநாளை உலகமெங்கும் கொண்டாடப்படும் வேளையில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-
அன்பையும், கருணையையும் உலகிற்கு போதித்த இயேசுபிரான் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடும் கிறிஸ்தவ சொந்தங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இயேசு பிறந்த இந்த நன்னாளில் இல்லாதவர்களுக்கு அனைத்து வகைகளிலும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். இந்த உலகில் இயேசு விரும்பிய அமைதி, கருணை, வளம், ஒற்றுமை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தும் பெருகுவதற்காக உழைக்க நாம் உறுதியேற்போம்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:-இறையருளால் மக்களின் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்க, அன்பு பெருகியிருக்க பிரார்த்தித்து, உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ சொந்தங்களுக்கும் என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், கட்சியின் சார்பிலும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சு.திருநாவுக்கரசர் எம்.பி., புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழக விழிப்புணர்வு கட்சி தலைவர் வெ.தியாகராஜன், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Next Story