முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிற இடங்களில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது


முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிற இடங்களில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது
x
தினத்தந்தி 25 Dec 2019 1:15 AM GMT (Updated: 25 Dec 2019 1:15 AM GMT)

முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிற இடங்களில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று (புதன்கிழமை) ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, 

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

27-ந் தேதி முதல் கட்ட தேர்தலில், 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,700 ஊராட்சி தலைவர்கள், 37 ஆயிரத்து 830 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

இந்த இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி முடிந்தது. 19-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், சுமார் 20 ஆயிரம் பதவிகளுக்கு போட்டியின்றி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
எஞ்சி உள்ள பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடுபவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிராமங்களில் திருவிழா போன்று தேர்தல் பிரசாரம் அமைந்து இருந்தது. அரசியல் கட்சி சார்புடன் நடக்கும் பதவிகளுக்கு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்தனர்.

முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் பிரசாரம் இன்று (புதன்கிழமை) மாலையுடன் முடிகிறது. இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் பிரசாரம் 25-ந் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு பிறகு வாக்காளர்கள் தவிர வெளியிடங்களில் பிரசாரத்துக்கு சென்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் நடக்கும் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கும் பணிகள் முடிந்து, வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான பணி நடந்து வருகிறது.

தேர்தலில் பணியாற்றுபவர்களுக்கான பணி ஆணைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மாநில தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சியினரும் பூத் சிலிப் வழங்கி வருகிறார்கள். 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதனை வீடியோ படம் எடுப்பதுடன், வெப் கேமராக்கள் மூலம் வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்படுகின்றன.

உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அதிகாரிகளை கொண்ட குழுக் களும் அமைக்கப்பட்டு உள்ளன. முதல்முறையாக பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அத்துடன் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. 27-ந்தேதி ஓட்டுப்பதிவு முடிந்த உடன் ஓட்டு பெட்டிகள் பாதுகாப்பாக எண்ணும் இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 30-ந் தேதி 2-ம் கட்ட தேர்தல்களும் நடந்து முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story