உள்ளாட்சி தேர்தல்: அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்; ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள்


உள்ளாட்சி தேர்தல்:  அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்; ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Dec 2019 10:37 AM GMT (Updated: 25 Dec 2019 10:37 AM GMT)

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

27-ந் தேதி முதல் கட்ட தேர்தலில், 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 4,700 ஊராட்சி தலைவர்கள், 37 ஆயிரத்து 830 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

இந்நிலையில்  உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மக்களுக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊரகப்பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் தொடர அதிமுகவின் வெற்றி இன்றியமையாதது. தமிழகத்தில் வன்முறைக்கு இடம் தராத அன்பின் வழி நின்ற ஆட்சி அமைதியாக நடக்கிறது.  தீய சக்திகளை ஒழித்து, நல்லவர்கள் கையில் உள்ளாட்சி பதவிகள் இருப்பது அவசியம் என்பதை மக்கள் அறிவீர்கள். 

2018ல் ஏற்பட்ட கடும் வறட்சியிலும் அரசு முறையாக குடிநீர் வழங்கியது. நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் நிலைகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story