வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம் பா.ஜ.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை


வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம் பா.ஜ.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை
x
தினத்தந்தி 26 Dec 2019 3:30 AM IST (Updated: 26 Dec 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் 95-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இல.கணேசன் உள்பட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை, 

பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் 95-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இல.கணேசன் உள்பட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வாஜ்பாய் பிறந்த நாள்

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 95-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்துக்கு, பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டே, ம.பொ.சி. மகள் மாதவி பாஸ்கரன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளும் வாஜ்பாய் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.

சமூக சேவை

இதையடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மக்கள் நலனுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தவர் வாஜ்பாய். அவருடைய பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சமூக சேவைகளை செய்து வருகிறது. தமிழகத்தில் அமைதியை சீர் குலைத்து, ஆட்சிக்கு வரவேண்டும் என்ற தி.மு.க.வின் நோக்கம் வெற்றி பெறாது.

குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தில் இலங்கை தமிழர்கள் மீது புதிதாக அக்கறை கொண்டிருப்பதாக தி.மு.க. தன்னை காட்டிக்கொள்கிறது. இதனை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

தீவிரவாதத்துக்கு எதிரான கட்சி

இலங்கையில் உள்ள தமிழ் மண், ஈழ தமிழர்களுக்கு சொந்தமானது. ஈழ தமிழர்கள் அனைத்து அடிப்படை வசதிகளுடன், அங்கு மறுகுடியமர்த்தப்படவேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதில் முதன்மையான தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருப்பார். பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி அல்ல.

தீவிரவாதத்துக்கு மட்டுமே எதிரான கட்சி. தமிழக பா.ஜ.க. தலைவரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. கட்சியின் மேலிட பார்வையாளர்கள் அனைவரிடமும் கருத்து கேட்டு உரிய நேரத்தில், உரிய தலைவரை அறிவிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story