வங்கியில் கடன் வாங்கி ரூ.32 கோடி மோசடி வங்கி அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு


வங்கியில் கடன் வாங்கி ரூ.32 கோடி மோசடி வங்கி அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 26 Dec 2019 5:00 AM IST (Updated: 26 Dec 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வங்கியில் கடன் வாங்கி ரூ.32 கோடி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடிக்கு துணை போனதாக வங்கி அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை, 

சென்னையில் வங்கியில் கடன் வாங்கி ரூ.32 கோடி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடிக்கு துணை போனதாக வங்கி அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

ரூ.32 கோடி கடன்

சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் பெரிய அளவிலான தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னையை சேர்ந்த 4 நிறுவனங்கள் சார்பில் தேனி மாவட்டத்தில் காற்றாலை நிறுவுவதற்காக கடந்த 2014-ம் ஆண்டு ரூ.32 கோடி கடன் வாங்கப்பட்டது.

காற்றாலை நிறுவுவதற்காக வாங்கப்பட்ட கடன் தொகையில் காற்றாலைகள் முறையாக அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கடன் தொகையும் முறையாக திருப்பி செலுத்தப்படவில்லை. இந்த கடன் தொகையை வழங்குவதில் விதிமுறைகளை மீறி வங்கி அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

சி.பி.ஐ. வழக்குப்பதிவு

இந்த முறைகேடுகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் சி.பி.ஐ.யில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், வங்கி அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மவுலிசங்கர், ரவிக்குமார், கல்யாணி சுப்பிரமணியம், சீனிவாசராவ், சாஸ்திரி ஆகியோர் மீதும், 4 காற்றாலை நிறுவனங்கள் மீதும், அந்த காற்றாலை நிறுவனங்களின் அதிகாரிகள் 9 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story